உயர் நீதிமன்ற நீதிபதிகள் அங் செங் ஹோக், ஹரி குமார் நாயர் ஆகிய இருவரும் மேல்முறையீட்டு நீதிபதிகளாக அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து தங்கள் புதிய பொறுப்பை அவர்கள் ஏற்பர்.
2008ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட திரு நாயர், சர்ச்சைத் தீர்வு, நடுவர் மன்றம் ஆகியவற்றில் கைதேர்ந்தவராக அடையாளம் காணப்பட்டதாகப் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டது.
2006ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டுவரை பீஷான் - தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகத் திரு நாயர் பொறுப்பு வகித்தார். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கு முன் அவர் அரசியலிலிருந்து ஓய்வுபெற்றார்.
2017 மார்ச் மாதம் துணைத் தலைமைச் சட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்ட திரு நாயர், 2023 ஜனவரியில் உயர் நீதிமன்ற நீதிபதியானார்.
மேல்முறையீட்டு நீதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும் திரு அங், 2009ஆம் ஆண்டு 38 வயதில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ஆக இளைய வழக்கறிஞராவார். 2019 ஆகஸ்ட் மாதம் அவர் உயர் நீதிமன்ற நீதிபதியானார்.
2022 செப்டம்பரில், நீதிபதி பதவியை விட்டு விலகிய திரு அங், தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தில் துணைத் தலைமைச் சட்ட அதிகாரி பொறுப்பை ஏற்றார்.
பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கின் வழக்கு விசாரணையில் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்களை வழிநடத்தியவர் திரு அங்.