ஆடவரைக் கத்தியால் தாக்கியதாக இருவர் கைது

ஆடவரைக் கத்தியால் தாக்கியதாக இருவர் கைது

1 of 2
படம்: சிங்கப்பூர் காவல்துறை
படம்: சிங்கப்பூர் காவல்துறை

15 Aug 2023 - 5:46 pm

1 mins read

இரண்டு ஆடவர்கள் சண்டையில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். 19, 20 வயது நிரம்பிய அவர்கள் கத்தியைக் கொண்டு மற்றோர் ஆடவரின் நெற்றியில் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

கிளார்க் கீயில் உள்ள ரீட் கிரெசண்ட் பூங்காவில் நடந்த சண்டை குறித்து ஞாயிறு காலை சுமார் 6.15 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையினர் கூறினர்.

பாதிக்கப்பட்டவர் மூன்று ஆடவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணைகள் காட்டின.

அந்த வாக்குவாதத்தின்போது அவர்களுக்கு இடையே சண்டை மூண்டது. அப்போது ஒருவர் கத்தியைக் கொண்டு பாதிக்கப்பட்டவரைத் தாக்கியதாகக் காவல்துறையினர் செய்தி அறிக்கை ஒன்றில் தெரிவித்தனர்.

சண்டைக்குப் பிறகு, மூன்று பேரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனர். பாதிக்கப்பட்டவரைத் தாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கத்தி ஒன்று மீட்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஞாயிறு பின்னேரத்தில் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

ஸ்டீவ் யப் கார் ஸுன், 19, தனேஷ் ஷேல்ட்ரிக் முஹமது சலீம், 20, ஆகியோரே அவர்கள். எஞ்சிய ஒருவரைக் காவல்துறையினர் இன்னும் தேடி வருகின்றனர்.

தகவல் தெரிந்தோர் 1800-255-0000 என்ற எண்ணில் காவல்துறையினரைத் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்
கைது