போலிப்பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 20 மற்றும் 48 வயதான இருவரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
இது குறித்து வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கையில் காவல்துறை தெரிவித்தது.
ஞாயிற்றுக்கிழமைக்கும் திங்கட்கிழமைக்கும் இடைப்பட்ட நாள்களில் பியோ கிரசெண்ட், ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1, உட்லண்ட்ஸ் குளோஸ் போன்ற பகுதிகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பல்வேறு அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவர்களைக் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 3,900க்கும் மேற்பட்ட போலியான வர்த்தக முத்திரை பதித்த விளையாட்டு ஆடைகளும் $270க்கும் அதிகமான ரொக்கமும் கைப்பற்றப்பட்டன. அந்தப் போலி ஆடைகளின் மதிப்பு $71,000க்கு மேல் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவ்விருவருக்கும் $100,000 வரை அபராதமும், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
போலிப் பொருள்களை விநியோகிப்பதும் விற்பனை செய்வதும் குற்றம். முறையான வணிக அனுமதி பெறாமல், பயனீட்டாளர்களின் இழப்பில் லாபம் ஈட்டுவோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்டியது.

