நியூ பிரிட்ஜ் சாலையில் இருக்கும் காவல் நிலையத்தில் காணொளிகள் எடுத்து அவற்றைச் சமூக ஊடகத்தில் பதிவிட்டவர்களைக் காவல்துறை கைது செய்தது.
41 வயது ஆடவரும் 33 வயது மாதும் இணைந்து இந்தக் குற்றத்தைப் புரிந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்துக் கடந்த வெள்ளிக்கிழமை காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பாதுகாக்கப்பட்ட பகுதியில் அனுமதியின்றி ஆகஸ்ட் 1ஆம் தேதி காணொளி பதிவுசெய்ததற்காக அந்த ஆடவர்மீது கடந்த சனிக்கிழமை குற்றம் சுமத்தப்பட்டது.
இதே குற்றத்தை அந்த மாது ஜூலை 13ஆம் தேதியும் ஆகஸ்ட் 1ஆம் தேதியும் புரிந்ததாகக் கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அவர்மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்.
பாதுகாக்கப்பட்ட பகுதிகளை உரிய அனுமதியின்றிப் புகைப்படமோ காணொளியோ எடுப்பது குற்றம். இந்தக் குற்றத்தைப் புரிந்தால் $20,000 வரை அபராதம், ஈராண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.