செம்பவாங்கில் இரு பேருந்துகள் மோதல்: ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

செம்பவாங்கில் இரு பேருந்துகள் மோதல்: ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

2 mins read
3aff0cca-8634-474c-9c54-42cae33ac33a
ஒரு பேருந்தின் பின்னால் மற்றொரு பேருந்து மோதியதில் இரு பேருந்துகளும் சேதமடைந்தன. - படம்: ஜோனதன் லிம், ஃபேஸ்புக்

செம்பவாங் வட்டாரத்தில் இரு பேருந்துகள் மோதியதில் பயணி ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

சென்ற மாதம் (மே) 27ஆம் தேதி நிகழ்ந்த அந்த விபத்தின் தொடர்பில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய வினாக்களுக்குக் காவல்துறை பதிலளித்துள்ளது.

அப்பர் தாம்சன் ரோட்டை நோக்கிய சாலையில் இரு பேருந்துகள் தொடர்பான சம்பவம் நிகழ்ந்திருப்பது குறித்து அன்றைய தினம் பிற்பகல் மணி 1.25 அளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

பேருந்துப் பயணியான 64 வயது ஆடவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. அப்போது அவர் சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இலேசான காயமடைந்த மற்றொரு பயணி மருத்துவமனை செல்ல மறுத்துவிட்டதாகவும் அந்தப் படை கூறியது.

இதற்கிடையே, 55 வயதான பேருந்து ஓட்டுநர் விசாரணையில் உதவிவருவதாகக் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

மே 27ஆம் தேதி பிற்பகல் 1 மணியளவில் விபத்தில் சிக்கிய 858 சேவை எண் கொண்ட பேருந்து ஈசூன் ரிங் ரோட்டில் சென்றுகொண்டிருந்த சிற்றுந்தின் பின்னால் மோதியதாக டவர் டிரான்சிட் பேருந்து நிறுவனம் சனிக்கிழமை (ஜூன் 6) தெரிவித்தது.

ஒரு பயணி தமது முழங்கையில் வலி இருப்பதாகக் கூறினார் என்றது அந்நிறுவனம். மற்றப் பயணிகள் அனைவரும் 858 சேவை எண் கொண்ட மற்றொரு பேருந்தில் பயணத்தைத் தொடர்ந்ததாகவும் அது கூறியது.

‘எஸ்ஜி வேர்ஹவுஸ் சேல் அண்ட் ஈவெண்ட்ஸ்’ என்னும் அமைப்பு தனது ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய காணொளியில், பச்சை நிறப் பேருந்து ஒன்று மற்றொரு பேருந்தின் பின்னால் மோதியிருந்ததைக் காணமுடிந்தது.

பச்சை நிறப் பேருந்தின் முன்புறக் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்ட அதேவேளை மோதப்பட்ட பேருந்தின் பின்பக்கக் கண்ணாடி உடைந்து நொறுங்கி சேதமடைந்ததையும் காணொளி காட்டியது.

குறிப்புச் சொற்கள்