ஓய்வுபெறவுள்ள மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர்

ஓய்வுபெறவுள்ள மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர்

2 mins read
15d06c1a-36eb-46f2-8cd9-743615d8405f
(இடமிருந்து) நீதிபதிகள் ஸ்டீவன் சோங் ஹோர்ங் சியோங், டே யோங் குவாங் ஆகியோர் செப்டம்பரில் ஓய்வு பெறவுள்ளனர். நீதிபதி தே ஹுவீ ஹுவீ, அக்டோபர் 1 முதல் மேலும் மூன்று ஆண்டுகளுக்குக் குடும்ப நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாகத் தொடர்ந்து பணியாற்றுவார். - படம்: சிங்கப்பூர் நீதிமன்றங்கள்
Google News Preferred Icon

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் செப்டம்பர் மாதம் ஓய்வு பெறவுள்ளனர். நீதிபதி டே யோங் குவாங்கின் இறுதிப் பணி நாள் செப்டம்பர் 2 என்றும் நீதிபதி ஸ்டீவன் சோங் ஹோர்ங் சியோங்கின் இறுதிப் பணி நாள் செப்டம்பர் 22 என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நீதிபதி டே ஹுவீ ஹுவீ, அக்டோபர் 1 முதல் மேலும் மூன்று ஆண்டுகளுக்குக் குடும்ப நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாகத் தொடர்ந்து பணியாற்றுவார் என்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) சிங்கப்பூர் நீதிமன்றங்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரியான சோங், 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியானார்.

ஓய்வுபெறும் மற்றொரு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியான டே, தமது நீதித்துறைப் பணியை 1981ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தொடங்கினார். முதலில் உதவிப் பதிவாளராகவும், பின்னர் துணைப் பதிவாளராகவும் அவர் பணியாற்றினார்.

இந்நிலையில், டே மற்றும் சோங் ஆகியோரின் பங்களிப்புகளுக்குத் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

“சிங்கப்பூர் நீதித்துறையின் சார்பில், நீதிபதி டேவுக்கும் நீதிபதி சோங்கிற்கும் அவர்களின் பல்லாண்டுகாலத் தலைசிறந்த சேவைக்காகவும் சிங்கப்பூரின் நீதி நிர்வாகத்திற்கு அவர்கள் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புக்காகவும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன்.

குடும்ப நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி டே ஹுவீ ஹுவீயின் பதவிக் காலத்தை அதிபர் தர்மன் சண்முகரத்னம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளதாகச் சிங்கப்பூர் நீதிமன்றங்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பதவி நீட்டிப்பு அக்டோபர் 1 முதல் நடப்புக்கு வரும்.

குறிப்புச் சொற்கள்