தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரண்டு இறைச்சி உணவுப் பொருள்கள் மீட்கப்பட்டன: எஸ்எஃப்ஏ

1 mins read
bfefa38b-d40d-42af-9ca9-9ffbb63643e1
சல்மோனெல்லா பாதிப்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தால், இரண்டு இறைச்சி உணவுப் பொருள்கள் மீட்கப்பட்டன. - படம்: சிங்கப்பூர் உணவு அமைப்பு

இங்கு விற்கப்படும் இரண்டு இறைச்சி உணவுப் பொருள்களில் சல்மோனெல்லா கலப்படம் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தால், சிங்கப்பூர் உணவு அமைப்பு அவற்றை மீட்டுக்கொண்டுள்ளது.

‘பெரெட்டா அன்டிபாஸ்டோ’, ‘பெரெட்டா கோப்பா’ எனும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அந்த இரண்டு உணவுப் பொருள்களின் காலாவதித் தேதிகள் முறையே 2024 ஏப்ரல் 29 என்றும், 2024 ஏப்ரல் 2 என்றும் தெரிவிக்கப்பட்டது.

பிப்ரவரி 12ஆம் தேதி அமெரிக்காவின் வேளாண் உணவுப் பாதுகாப்பு, சோதனைச் சேவை அந்த உணவுப் பொருள்களை மீட்டுக்கொள்வதாக அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து, இங்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவற்றை மீட்டுக்கொள்ளும்படி, உணவுப் பொருள்களின் இறக்குமதியாளரான ‘இண்டோகுனா (சிங்கப்பூர்)‘ நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.

சல்மோனெல்லா, உணவை நஞ்சாக்கவல்ல ஒரு வகையான கிருமி. அத்தகைய உணவை உண்டால், வயிற்றுப்போக்கு, அடிவயிற்று வலி, காய்ச்சல், வாந்தி போன்றவை ஏற்படலாம்.

அந்த உணவுப் பொருள்களை வாங்கியவர்கள் அவற்றை உட்கொள்ளக் கூடாது.

ஏற்கனவே அவற்றை உட்கொண்டவர்கள், உடல்நலமில்லாமல் போனால் மருத்துவ ஆலோசனையைப் பெறவேண்டும்.

சல்மோனெல்லா பற்றி மேல்விவரம் அறிய விரும்புவோர் சிங்கப்பூர் உணவு அமைப்பின் இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்