கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சிகளில் பொருத்தப்பட்டுள்ள கைப்பேசித் தரவு முனையங்களில் செப்டம்பர் 15ஆம் தேதி சேவைத் தடை ஏற்பட்டது.
அதனையடுத்து, தகுதிபெறும் டாக்சிப் பயணங்களுக்கான தரகுக்கட்டணத்திற்கு இரு நாள்களுக்கு விலக்கு அளிப்பதாக அந்நிறுவனம் செப்டம்பர் 22ஆம் தேதி அறிவித்துள்ளது.
ஓட்டுநர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள அக்கட்டண விலக்கு செப்டம்பர் 25ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் செப்டம்பர் 27ஆம் தேதி முற்பகல் 11.59 வரை அமலில் இருக்கும் என அந்நிறுவனத்தின் வாடகைத்துறைத் தலைவர் யீ ஹோன் வாய் தெரிவித்துள்ளார்.
செயலி வழியிலான பதிவுகளுக்கு வழக்கமாக 70 காசு முதல் $1 வரை கம்ஃபர்ட்டெல்குரோ தரகுக்கட்டணம் வசூலிக்கிறது.
சிங்டெல் கட்டமைப்பு இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அச்சேவைத் தடை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களுக்கு நிதியுதவியும் ஆதரவும் வழங்கத் தேசிய டாக்சி சங்கம் கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
கிட்டத்தட்ட $80 முதல் $100 வரை வருமான இழப்பைச் சந்தித்ததாகக் கூறும் பாதிக்கப்பட்ட டாக்சி ஓட்டுநர் ஜாக்கி டங், தரகுக்கட்டண விலக்கு போதுமானதன்று என்றும் அன்றாட டாக்சி வாடகைக் கட்டணத்தையே தள்ளுபடி செய்வதே நியாயமானது என்றும் தெரிவித்தார்.
