புக்கிட் மேரா வீட்டில் புதன்கிழமை (ஆகஸ்ட் 13) ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
அவர்களில் ஒருவர் 34 வயது ஆடவர். மற்றவர் 32 வயதுப் பெண் என்று கூறப்பட்டது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், புளோக் 106 ஜாலான் புக்கிட் மேராவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மாலை 4 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் குறிப்பிட்டிருந்தது.
சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு வீரர்கள் சென்றபோது, நான்காவது மாடியில் உள்ள ஒரு வீட்டின் வசிப்பறையும் படுக்கையறையும் தீப்பிடித்து எரிந்தன. குடிமைத் தற்காப்புப் படை வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்துத் தீயை அணைத்தனர்.
அந்த வீட்டின் சமையலறையில் நினைவற்ற நிலையில் இருவரை அவர்கள் கண்டனர்.
அவ்விருவரும் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்பட்டது.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் அவர்களின் மரணத்தில் சூது ஏதும் நிகழ்ந்திருப்பதாகச் சந்தேகிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.
அருகிலுள்ள வீடுகளைச் சேர்ந்த மேலும் இருவரும் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஒருவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். மற்றொருவர் புகையைச் சுவாசித்ததால் பாதிக்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
பாதுகாப்பு நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட புளோக்கிலிருந்து ஏறக்குறைய 60 பேர் வெளியேற்றப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
இரவு 7.30 மணியளவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு சம்பவ இடத்திற்குச் சென்றபோது, இரண்டு தீயணைப்பு வாகனங்களும் மூன்று காவல்துறை கார்களும் புளோக்கிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தன. அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புத் தடுப்பை அமைத்திருந்தனர்.
குடியிருப்பாளர்கள் பலர் கார் நிறுத்துமிடத்தைச் சுற்றி நின்றிருப்பதையும் அவர்களில் சிலர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளுடன் பேசுவதையும் காணமுடிந்தது.