தெம்பனிசில் சென்ற ஆண்டு (2024) ஏப்ரல் மாதம் ஆறு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்துக்குக் காரணமான ஆடவர் அக்டோபர் 23ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொள்ளவிருக்கிறார்.
2024 ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த அந்த விபத்தில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவி உட்பட இருவர் உயிரிழந்தனர்.
ஜூலை 31ஆம் தேதி நடைபெற்ற வழக்குக்கு முந்தைய கலந்துரையாடலில் முகமது சையாஃபி இஸ்மாயில், 44, தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கான தேதி உறுதிசெய்யப்பட்டது.
இந்த வழக்கில் சென்ற ஆண்டு ஏப்ரலில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தேதி உறுதிசெய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி, ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தி மரணம் விளைவித்தது, ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டிக் காயம் ஏற்படுத்தியது, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, விபத்துக்குப்பின் நில்லாமல் சென்றது ஆகியவை தொடர்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
பின்னர் இந்த ஆண்டு ஜூன் மாதம், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது தொடர்பில் அவர் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
சையாஃபி, போக்குவரத்துச் சமிக்ஞை விளக்கு சிவப்பாக இருந்தவேளையில் காரை நிறுத்தத் தவறியதாகவும் அதையடுத்து அவரது கார் மூன்று கார்களை மோதியதாகவும் கூறப்படுகிறது.
அவரது காரால் மோதப்பட்ட முதல் கார் சுழன்று, தலைகுப்புறக் கவிழ்ந்ததுடன் ஒரு வேன் மீது மோதியது. அந்த வேன் சிறிய ரகப் பேருந்தின் மீது மோதியது.
தொடர்புடைய செய்திகள்
இந்த விபத்தில் திருவாட்டி நூர்ஸிஹான் ஜுவாஹிப், 57, அஃபிஃபா முனிரா முகம்மது அஸ்ரில், 17, இருவரும் உயிரிழந்தனர். மேலும் அறுவர் காயமடைந்தனர். காயமடைந்தோரில் இருவர் 11 வயதுச் சிறுவர்கள்.
ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தி மரணம் விளைவித்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஈராண்டுகள் முதல் எட்டு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அத்துடன் குற்றவாளியின் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும்.
ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டிக் காயம் ஏற்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஈராண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ $10,000 வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.