இரு ஆடவர்கள் தாங்கள் இருந்த வீடுகளில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) பொருள்களை சன்னல் வழியே வெளியே வீசியுள்ளனர்.
ஒருவர் ஒரு மேசையையும் மற்றொருவர் சைக்கிளையும் வீசியதில் நல்லவேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாத இருவரும் செம்பவாங் கிரசென்டில் இருக்கும் ஒரே வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் கட்டடத்தில் உள்ள இருவேறு வீடுகளின் குடியிருப்பாளர்கள் ஆவர். அவர்கள் இருவர்மீதும் புதன்கிழமை (மார்ச் 25) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
முகம்மது நிரைடில் முகம்மது ஜஸ்மனி, 26, நான்காம் மாடி வீட்டிலிருந்து ஒரு மேசையை சன்னல் வழியே வீசியுள்ளார். அதுகுறித்து அன்றைய தினம் காலை 10 மணியளவில் புகார் அளிக்கப்பட்டு அன்றே அவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை கூறியது.
முதல் சம்பவத்தைத் தொடர்ந்து 24 மணி நேரத்துக்குள் மறுநாள் திங்கட்கிழமை (மார்ச் 23) அதிகாலை 1.30 மணிக்கு காவல்துறையில் மற்றொரு புகார் அளிக்கப்பட்டது. அதில் அதே வீவக கட்டடத்தின் 11ஆம் மாடியில் இருந்து ஒரு சைக்கிள் வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அக்குற்றத்தைப் புரிந்த ஹொசைன் அல் சையித் அல் சபீ என்ற 27 வயது ஆடவரும் அன்றே கைதானார்.
இரு ஆடவர்களும் ஏப்ரல் 1ஆம் தேதி மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வர உள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதத்துடன் ஆறுமாத சிறைத் தண்டனை இருவருக்கும் விதிக்கப்படும்.

