செல்லப்பிராணிகள் பராமரிப்பு நிலையத்திலிருந்து உடல்நலம் குன்றிய நிலையில் வீட்டிற்கு அழைத்துசெல்லப்பட்ட ‘பிரெஞ்சு புல்டாக்’ வகையைச் சேர்ந்த இரு நாய்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தேசியப் பூங்காக் கழகம் தெரிவித்துள்ளது.
நியோ தியூ லேனில் உள்ள ‘அட்வென்ச்சர் டெயில்ஸ்’ (Adventure Tails) எனும் செல்லப்பிராணிகள் பராமரிப்பு நிலையத்திலிருந்து மார்ச் 6ஆம் தேதி மாலை அவ்விரு நாய்களும் வீட்டிற்குக் கொண்டுசெல்லப்பட்டன.
நான்கு வயதுடைய அவ்விரு செல்லப்பிராணிகளின் பெயர் முறையே கிரியோன் (Kreon), கோபு (Gobu) என்று கூறப்பட்டது.
வீட்டிற்குச் சென்றவுடன் அவை வெப்ப அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
‘பைரோ லாஜிஸ்டிக்ஸ்’ (Pyro Logistics) என்ற போக்குவரத்து நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் ஓட்டிய வாகனத்தில் அவை கொண்டுசெல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.
மார்ச் 10ஆம் தேதி இன்ஸ்டகிராமில் பகிரப்பட்ட அந்தச் சம்பவம் குறித்த காணொளியில், கூண்டிலிருந்து வெளியே எடுக்கப்பட்டபோது ‘கிரியோன்’ அசைவற்றுக் கிடந்ததைக் காண முடிகிறது.
பின்னர், அதற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதும் அதில் பதிவிடப்பட்டுள்ளது.
அந்த விவகாரம் குறித்துத் தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தேசியப் பூங்காக் கழகம் மார்ச் 11ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.


