வீடமைப்பு வளர்ச்சிக் கழக உயர்மாடி வீடுகளிலிருந்து பொருள்களை வீசிய இருவருக்குத் தலா $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த இருவரும் அந்தக் குற்றச்செயலுக்கு தாங்கள் காரணமல்லர் என நிரூபிக்கத் தவறிவிட்டனர்.
அந்த இருவரில் ஒருவர் 63 வயது ஆடவர், மற்றவர் 42 வயது மாது. அவ்விருவரும் குற்றம் புரிந்தவர்கள் என்ற அனுமான சட்டப் பிரிவின்கீழ் முதல் முதலாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்று வாரியம் சனிக்கிழமை (ஜூலை 27ஆம் தேதி) அன்று தெரிவித்தது.
அந்த ஆடவர் ஜூன் மாதம் 11ஆம் தேதி தமது பிடோக் நார்த் ஸ்திரீட் 2 வீட்டுக் கழிப்பறையிலிருந்து பொருளை வீசினார் என்ற அனுமானத்தின் அடிப்படையில் அவருக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோல் அந்த மாது தமது அங் மோ கியோ ஸ்ட்ரீட் 52 வீட்டிலிருந்து உணவுக் கழிவையும் திரவப் பொருளையும் சமையலறைச் சன்னல் வழியாக வீசினார் என்றும் கூறப்படுகிறது.
ஒருவர் குற்றம் புரிந்துள்ளார் என்ற அனுமானத்தில் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்த வழிசெய்யும் சட்டப் பிரிவு 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடப்புக்கு வந்தது. இது வீடமைப்பு வீடுகளில் உரிமையாளராக அல்லது குத்தகையாளராகப் பதிவு செய்யப்படிருப்பவர் பொருள்களை தங்கள் இல்லங்களிலிருந்து வீசி எறிவதை தடுக்கும் நோக்கம் கொண்டது.
இந்தச் சட்டப் பிரிவு முதன்முதலாக 2023ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட வீட்டிலிருந்து பொருள் ஒன்று வீசி எறியப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னரே இச்சட்டப் பிரிவைப் பயன்படுத்தி குற்றம் சுமத்தப்படுவதாக வாரியம் தெரிவித்தது.
அந்த வீட்டின் சொந்தக்காரர் அல்லது அங்கு தங்கியிருக்கும் குத்தகைக்காரர் குற்றம் நிகழ்ந்த சமயம் தான் வீட்டில் இல்லை என்றோ அல்லது அந்தக் குற்றச்செயலை அங்கு தங்கியிருக்கும் வேறு ஒருவர் புரிந்தார் என்று நிரூபித்தால் மட்டுமே இந்த அனுமானம் மீட்டுக்கொள்ளப்படும்.
தொடர்புடைய செய்திகள்
குற்றம் நிகழ்ந்த புளோக்குகளில் பலமுறை உயர்மாடிகளிலிருந்து பொருள்கள் வீசி எறிந்ததாகப் புகார் வந்ததை அடுத்து அங்கு வாரியம் குற்றச்செயல்களை படம் பிடிக்க கேமராக்களை பொருத்தியது.