சிங்கப்பூரின் மொத்த கருவுறுதல் விகிதம் 2025ல் 0.87 என்ற வரலாற்றுச் சரிவை எட்டியுள்ளது என்றும் இதை ஒரு ‘வாழ்வாதாரச் சவால்’ என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங், பிப்ரவரி 26ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
அதே நாளில், இப்பிரச்சினையைச் சமாளிக்க சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் ஒரு புதிய பணிக்குழுவை அமைக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்தது.
குழந்தை வளர்ப்பு தொடர்பான கவலைகள் குறித்தும் பிரதமர் லாரன்ஸ் வோங், பிப்ரவரி 12ஆம் தேதி தனது 2026 வரவுசெலவுத் திட்ட அறிக்கை உரையில் குறிப்பிட்டார். அதில், குடும்பங்களுக்கு ஆதரவளிக்கவும் உறுதியளிக்கவும் அடுத்தடுத்த நிதிநிலை அறிக்கைகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அவர் எடுத்துரைத்தார்.
இருப்பினும், குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் சலுகைகள் குறித்து சிங்கப்பூரில் உள்ள சிலர் திருப்தியடையவில்லை என்று தெரிகிறது.
உண்மையில், ஏஷியாஒன் நடத்திய ஓர் ஆய்வில், சிங்கப்பூரில் உள்ள மக்களில் கிட்டத்தட்ட ஐந்தில் இரண்டு பேர், குடும்பங்களுக்கான அண்மைய 2026 பட்ஜெட் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று கருதுவதாகத் தெரியவந்துள்ளது.
பிப்ரவரி 13 முதல் 26 வரை, பிரதமர் வோங்கின் 2026 பட்ஜெட் உரை குறித்து மக்களின் கருத்துகளை அறிய மொத்தம் 1,035 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
பதிலளித்தவர்களில், 79 விழுக்காட்டினர் பட்ஜெட் 2026 தொடர்பான அறிவிப்புகளைப் பல்வேறு அளவுகளில் பின்பற்றியதாகக் கூறினர்.
பிரதமர் வோங்கின் பட்ஜெட் அறிக்கையைத் தொடர்ந்து கவனித்தவர்களில், 38 விழுக்காட்டினர், குடும்பங்களுக்கு அதிக ஆதரவையும் மேம்பட்ட உறுதியையும் வழங்கும் நோக்கம் கொண்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
ஏஷியாஒன் நடத்திய கணக்கெடுப்பில், 35 முதல் 44 வயதுக்குட்பட்ட பதிலளித்தவர்களில் 58 விழுக்காட்டினர் இந்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று கருதுவதாகவும், அவர்களே அதிகளவில் உணர்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வயதினர் தாங்களே பெற்றோராக இருப்பதாலும், இந்த நடவடிக்கைகளின் தாக்கத்தை நேரடியாக உணர்வதாலும் இவ்வாறு கருதலாம்.
குறிப்பாக, இத்தகைய நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என்று கருதுவதற்கு அதிக வாய்ப்புள்ள அடுத்த வயதினர் 25 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். அவர்களில் பாதி பேர் இவ்வாறு கருதுகின்றனர்.
பதிலளித்தவர்களில் கணிசமான விழுக்காட்டினர் குடும்பங்களுக்கான ஆதரவு போதுமானதாக இல்லை என்று கூறியபோதிலும், அவர்களில் 47 விழுக்காட்டினர் இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அதுவே அரசாங்கத்தின் முதன்மை முன்னுரிமை என்று கூறினர்.
அவர்களின் பார்வையில், 2026 வரவுசெலவுத் திட்டத்திற்கான முதல் ஐந்து முன்னுரிமைகள் பின்வருமாறு: குடும்பங்களுக்கான ஆதரவு, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல் (37%), மீள்திறன் கொண்ட பணியாளர் குழுவை உருவாக்குதல் (35%), பொருளியல் உத்தியை முன்னெடுத்தல் (22%), பாதுகாப்பு மற்றும் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் (19%).

