சிங்கப்பூர் கடைத்தொகுதிகள், பொது இடங்கள் ஆகியவற்றில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு சீன நாட்டு ஆடவர்கள் காவல்துறையிடம் சிக்கினர்.
அவர்களில் இருவருக்குச் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
யூ ஹைபோ, 50, ஸாங் வெய், 44, தங்கள்மீது சுமத்தப்பட்டத் திருட்டுக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்.
திருட்டுக் குற்றத்திற்குத் திட்டமிட்ட யூவிற்கு நான்கு மாதங்கள் இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஸாங்கிற்கு இரண்டு மாதங்கள், ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூர் ரொக்கத்திற்கு நல்ல மதிப்பு உள்ளதால் அதைத் திருடும் நோக்கத்தில் அவர்கள் சிங்கப்பூருக்கு வந்துள்ளனர்.
2026ஆம் தொடக்கத்தில் யூ வெளிநாடுகளுக்குச் சென்று திருட திட்டமிட்டார். அவருக்குத் துணையாக ஸாங், ரென் பூமின், 40, ஸி ஹைபோ, 40 உதவ முன்வந்தனர்.
முதலில் நான்கு ஆடவர்களும் சிங்கப்பூருக்கு இவ்வாண்டு மார்ச் மாத இறுதியில் வந்தனர். பின்னர் அவர்கள் ஏப்ரல் 1ஆம் தேதி மலேசியா சென்றனர். பிறகு அந்த நால்வரும் ஏப்ரல் 12ஆம் தேதி சிங்கப்பூர் திரும்பினர்.
ஏப்ரல் 1 முதல் 14 வரை மக்கள் அதிகமாக உள்ள இடங்களில் பல்வேறு குற்ற நடவடிக்கையில் அக்குழு ஈடுபட்டது.
ரென், ஸி திருடுவார்கள் அவர்களுக்குத் துணையாக ஸாங் இருப்பார். யூ ஹோட்டலில் இருப்பார்.
ஏப்ரல் 13ஆம் தேதி விவோ சிட்டி கடைத்தொகுதியில் ஓர் ஆடவரின் பையை மூவரும் திருடினர். அதில் 100 வெள்ளி ரொக்கம், சாவிகள், அடையாள அட்டை போன்றவை இருந்தன.
பின்னர் மூவரும் மரினா பே சாண்ட்சில் ஒரு பெண்ணிடம் பையைத் திருடினர். ஆனால் அதில் ரொக்கம் ஏதும் இல்லை.
ஏப்ரல் 14ஆம் தேதி ரென், ஸி செந்தோசாவில் 261 வெள்ளியைத் திருடினர். பாதிக்கப்பட்டவர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார். அதன் பிறகு நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
ரென் மற்றும் ஸி மீதான விசாரணைத் தொடர்கிறது.

