தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புவன விஸ்தா விபத்து: சிறுமிகள் இருவருக்குக் காயம்

1 mins read
2a9b3ace-0a8b-457c-aa5d-e1ddc8e0ec88
டோவர் ரோட்டுக்கும் நார்த் புவன விஸ்தா ரோட்டுக்கும் இடைப்பட்ட சாலைச் சந்திப்பில், விபத்து நடந்த இடத்தில் வெள்ளை நிறக் காலணி ஒன்று காணப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புவன விஸ்தாவில் ஏப்ரல் 1ஆம் தேதி லாரி சம்பந்தப்பட்ட விபத்து ஒன்றைத் தொடர்ந்து, 12, 13 வயது நிரம்பிய இரண்டு சிறுமிகள் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

பிற்பகல் 2.20 மணிவாக்கில் ஆயர் ராஜா அவென்யூவுக்கும் நார்த் புவன விஸ்தா ரோட்டுக்கும் இடைப்பட்ட சாலைச் சந்திப்பில் நடந்த விபத்து குறித்து தனக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் அது சொன்னது.

மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது இரண்டு சிறுமிகளும் சுயநினைவுடன் இருந்ததாக காவல்துறை கூறியது.

விபத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட காணொளி ஒன்றில், சாலைச் சந்திப்பில் இருவர் சாலையில் கிடந்ததைக் காணமுடிந்தது. குறைந்தது பத்துப் பேர் அவர்களைச் சுற்றியிருந்தனர். லாரி ஒன்று அவர்களுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தது.

விசாரணையில் 54 வயது லாரி ஓட்டுநர் உதவிவருவதாக காவல்துறை தெரிவித்தது.

மாலை 5.45 மணிவாக்கில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சம்பவ இடத்தைச் சென்றடைந்தபோது, இடம் சுத்தம் செய்யப்பட்டுவிட்டது. காலணி ஒன்றும், பிளாஸ்டிக் குவளை ஒன்றும் அருகில் இருந்த புல்லில் காணப்பட்டன.

இருப்பினும், அந்தப் பொருள்களுக்கும் விபத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்