அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி மோட்டார் சைக்கிளோட்டியின் மரணத்துக்குக் காரணமாக இருந்த இருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மத்திய விரைவுச்சாலையில் 33 வயது கெசிடி டான் டிங் ஹுவீயும் 35 வயது ரேசன் லூ சியான் ஹாவ்வும் அதிவேகமாக கார் ஓட்டியதுடன் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்காமல் முந்திச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
இருவர் மீதும் கொலை செய்யும் நோக்கமின்றி மரணம் விளைவித்த குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது.
சாலையின் இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்துக்குத் தமது காரைத் திடீரென்று திருப்பியதாகக் கூறப்படுகிறது.
மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் மீது டான் ஓட்டிய கார் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக அந்த மோட்டார் சைக்கிளோட்டி தூக்கி வீசப்பட்டார்.
சாலையில் விழுந்த மோட்டார் சைக்கிளோட்டி மீது லூவின் வாகனம் ஏறிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதன் விளைவாக அந்த மோட்டார் சைக்கிளோட்டி மரணம் அடைந்தார்.
தொடர்புடைய செய்திகள்
விபத்து குறித்து 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதியன்று அதிகாலை 2 மணி அளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட 31 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மாண்டார்.
டான் மணிக்கு 192 கிலோ மீட்டர் வரையிலான வேகத்திலும் லூ மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்திலும் கார் ஓட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய விரைவுச்சாலையில் வாகனங்களுக்கான வேக வரம்பு மணிக்கு 90 கிலோ மீட்டர்.
விபத்துக்குக் காரணமான இரு ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களது வாகன ஓட்டுநர் உரிமங்கள் உடனடியாகத் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 2ஆம் தேதியன்று விசாரிக்கப்படும்.

