எட்டோமிடேட் எனும் போதைப்பொருள் உட்கொண்டு, போக்குவரத்தின் எதிர்திசையில் வாகனங்களை ஓட்டியதாகக் கூறப்படும் 20 வயது ரேடன் சோங் ஷி ஆன், 35 வயது கோ சீ சியோங் ஆகிய இருவர்மீதும் வியாழக்கிழமை (செப்டம்பர் 3) குற்றம் சுமத்தப்பட்டது.
ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியது, போதைப்பொருளை உட்கொண்டு வாகனம் ஓட்டியது எனத் தலா இரு குற்றச்சாட்டுகள் அவ்விரு ஆடவர்கள்மீதும் சுமத்தப்பட்டன.
கடந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி ரேடன் சொங், ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 91ல் தமது வாகனத்தைச் செலுத்தியபோது, போக்குவரத்து விளக்கு பச்சையாக மாறிய பிறகும் காரை நகர்த்தத் தவறியதாகச் செப்டம்பர் 2ஆம் தேதி காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மேலும், சொங்கின் வாகனத்தைப் பேருந்து ஒன்று கடந்து சென்றதும், அவர் சாலையின் மத்திய தடுப்பின் மீதேறி, சாலையின் எதிர்த்திசைக்குத் தமது வாகனத்தைச் செலுத்தியதாகவும் அது கூறியது.
கிட்டத்தட்ட 160 மீட்டர் தூரத்திற்குப் போக்குவரத்துத் திசைக்கு எதிராக வாகனத்தைச் செலுத்தி, ஒரு காரின் மீதும் வேனின் மீதும் சோங்கின் கார் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இரண்டாவது சம்பவத்தில் தொடர்புடைய கோ சீ சியோங், 2025ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி சுவா சூ காங் அவென்யூ 1ன் வழியே வாகனத்தைச் செலுத்தி, சுவா சூ காங் வேயில் திரும்பியதாகக் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 300 முதல் 350 மீட்டர் தூரம் வரை போக்குவரத்தின் எதிர்திசையில் வாகனத்தைச் செலுத்தி, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் அவர் நுழைந்ததாகக் கூறப்பட்டது.
இருவரின் காரில் இருந்தும் மின்சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதோடு, அவர்களின் ரத்தத்தில் எட்டோமிடேட் கலந்திருந்ததும் உறுதிசெய்யப்பட்டது.


