வட்டாரக் குளிரூட்டி முறையைப் பயன்படுத்துவது பற்றி ஜூரோங்கில் உள்ள இரண்டு மருத்துவமனைகள் பரிசீலனை செய்து வருகின்றன.
இது தொடர்பாக, கெப்பலுடன் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையும் ஜூரோங் சமூக மருத்துவமனையும் புரிந்துணர்வுக் குறிப்பில் நேற்று (ஜூன் 5) கையெழுத்திட்டன.
கெப்பலின் வட்டார குளிரூட்டு முறையுடன் ஒருங்கிணைப்பது தொடர்பாக இரண்டு மருத்துவமனைகளும் பரிசீலனை செய்யும்.
வட்டாரக் குளிரூட்டி முறை செலவுகளையும் கரிம வெளியேற்றத்தையும் குறைக்க உதவக்கூடும் என்று இரு மருத்துவமனைகளும் கூறின.
தற்போது இரு மருத்துவமனைகளும் அவற்றில் அறுவை சிகிச்சை அறைகள், தீவிர சிகிச்சை அறைகள், மருத்துவ சாதனங்கள் ஆகியவற்றை 24 மணி நேரமும் குளிராக வைத்திருக்க மையப்படுத்தப்பட்ட குளிர்ந்த நீர் விநியோகத்தை அதிகம் சார்ந்திருக்கின்றன.
ஒருவேளை இந்த விநியோகம் தடைப்பட்டால் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களுக்கு மாற்று குளிரூட்டிகள் தேவைப்படுகின்றன.
எரிசக்தியை வீணாக்காமல் பயன்படுத்த, வட்டாரக் குளிரூட்டி முறை எரிசக்தியை சேமித்து வைக்கும் முறை, அறிவார்ந்த முறையில் கட்டுப்படுத்தும் முறை போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.
தற்போது பயன்பாட்டில் உள்ள முறையைக் காட்டிலும் வட்டாரக் குளிரூட்டி முறையால் மேலும் நம்பகமான, சீரான குளிரூட்டும் வசதிகளை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதனால் சேவைத் தடைகள் குறையும் என்றும் நோயாளிகளுக்கு அசௌகரியம் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.
தற்போது பயன்படுத்தப்படும் குளிரூட்டி முறையின்கீழ், ஒவ்வொரு கட்டடத்துக்கும் அதன் சொந்த குளிரூட்டி இருக்கும்.
வட்டாரக் குளிரூட்டி முறையின்கீழ், குளிர்ந்த நீர் உற்பத்தி செய்யப்பட்டு நிலத்துக்கு அடியில் செல்லும் குழாய்கள் வழியாக அது கட்டடங்களுக்கு விநியோகம் செய்யப்படும்.

