சிங்கப்பூர் - ஆஸ்திரேலியா இடையே இரு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

சிங்கப்பூர் - ஆஸ்திரேலியா இடையே இரு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

படம்: சாவ்பாவ்

24 Nov 2026 - 2:41 pm

2 mins read

கேன்பரா: உலகளவில் அதிகரித்துவரும் நிச்சயமற்ற நிலைக்கு இடையே, பொருளியல் மீள்திறனை வலுப்படுத்தும் நோக்கில் சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) தேதி இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

அத்தியாவசியப் பொருள்களின் விநியோகத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் எல்லை தாண்டிய கரிமச் சேகரிப்பிற்கும் இந்த ஒப்பந்தங்கள் வழிவகுக்கின்றன.

தற்போதுள்ள விநியோகச் சங்கிலி ஏற்பாடுகளை விரிவுபடுத்தும் முதல் ஒப்பந்தத்தின்கீழ், பெட்ரோலிய எண்ணெய், திரவ இயற்கை எரிவாயு ஆகியவற்றைத் தாண்டி உணவுப் பொருள்கள், பகுதிமின்கடத்திகள், நீர்ச் சுத்திகரிப்பு வேதிப்பொருள்கள், மருந்துகள், மருத்துவப் பொருள்கள், தொலைத்தொடர்புக் கருவிகள் உள்ளிட்ட பிற அத்தியாவசியப் பொருள்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் சேகரிக்கப்படும் கரியமில வாயுவைக் கடலுக்கு அடியில் சேமிப்பதற்காக ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டுசெல்வதற்கான கட்டமைப்பை இரண்டாவது ஒப்பந்தம் உருவாக்குகிறது. இதன்மூலம், அகற்றுவதற்குக் கடினமான தொழிற்சாலைக் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கையாள்வதற்குச் சிங்கப்பூருக்குப் புதிய வழிமுறை பிறக்க வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலியத் தலைநகர் கேன்பராவில் நடைபெற்ற சிங்கப்பூர் - ஆஸ்திரேலியா 11வது வருடாந்தரத் தலைவர்கள் கூட்டம், இரு தலைவர்களுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தை ஆகியவற்றைத் தொடர்ந்து, பிரதமர் லாரன்ஸ் வோங் - ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் முன்னிலையில் இந்த இரண்டு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன.

மேலும், செயற்கை நுண்ணறிவு தொடர்பான கூட்டறிக்கை ஒன்றுக்கும் இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளதோடு, ஆஸ்திரேலியாவில் சிங்கப்பூரின் ராணுவப் பயிற்சிகளுக்கு ஆதரவளிக்கும் தற்காப்பு உடன்பாட்டைப் புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகளையும் வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளன.

மேற்கு சிட்னி அனைத்துலக விமான நிலையத்திற்கான சிங்கப்பூர் ஏர்லைன்சின் முதல் விமானச் சேவை மூலம் பிரதமர் வோங் சென்றது இரு நாடுகளின் வலுவான உறவை எடுத்துக்காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இரு நாடுகளும் தங்களது மக்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கவும் தொடர்புகளை வலுப்படுத்தவும் புதிய வழிகளைக் கண்டறிந்து வருவதாகப் பிரதமர் வோங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
லாரன்ஸ் வோங்ஆஸ்திரேலியாஒப்பந்தம்