உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாகக் கஞ்சா, ‘ஐஸ்’ போன்ற போதைப்பொருள்களை சிங்கப்பூருக்குள் கடத்த முயன்ற மலேசியர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்தச் சம்பவம் திங்கட்கிழமை (மே 4) நடைபெற்றதாக குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையமும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் கூட்டாகத் தெரிவித்துள்ளன.
29 வயதுப் பெண்ணும் 26 வயது ஆடவரும் 2,261 கிராம் கஞ்சாவையும் 261 கிராம் மெத்தம்ஃபெட்டாமைன் அல்லது ‘ஐஸ்’ போதைப்பொருளையும் சிங்கப்பூருக்குள் கடத்தி வர முயன்றதாக வியாழக்கிழமை (மே 7) காலை அந்த இரு அமைப்புகளும் வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.
260 கிராம் மெத்தம்ஃபெட்டாமைன் அல்லது 500 கிராம் கஞ்சாவை சிங்கப்பூருக்குள் எடுத்து வந்தோலோ அல்லது இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பினாலோ அந்தக் குற்றத்தில் ஈடுபடுவோர் மரண தண்டனையை எதிர்நோக்கக்கூடும்.
அந்த ஆணும் பெண்ணும் மலேசியப் பதிவு எண் கொண்ட காரில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியைக் கடந்து சிங்கப்பூருக்குள் வர முயன்றபோது அதிகாரிகள் அந்த வாகனத்தைச் சோதனை செய்தனர். அப்போது காரின் ‘டிக்கி’யில் அவர்களுக்குச் சொந்தமான பை ஒன்று இருந்தது.
அதனுள் இருந்த இரண்டு கால்சட்டைகளில் போதைப்பொருள் என்று நம்பப்படும் பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக அறிக்கை குறிப்பிட்டது.
உடனடியாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த அதிகாரிகள் பிளாஸ்டிக் பைகளிலும் கறுப்புநிற பொட்டலங்களிலும் இருந்தவை போதைப்பொருள்கள் என்பதைச் சோதித்து அறிந்தனர்.
அந்த போதைப்பொருள்களின் மதிப்பு $71,000 என்றும் அவை 470 போதைப் புழங்கிகள் ஒரு வார காலத்திற்குப் பயன்படுத்தக்கூடிய அளவில் இருந்தன என்றும் அதிகாரிகள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர். விசாரணை நீடிக்கிறது.

