சிங்பாஸ் விவரங்களைத் திருடிய மலேசியர்கள் இருவர் கைது

சிங்பாஸ் விவரங்களைத் திருடிய மலேசியர்கள் இருவர் கைது

2 mins read
4f000f28-db3b-4589-a5cb-ec7c6c2452e1
ஆகஸ்ட் 21 முதல் 25ஆம் தேதி வரை நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையின்போது, ‘சிங்பாஸ்’ நம்பிக்கை மற்றும் பாதுகாப்புப் பிரிவின் உதவியோடு காவல்துறையின் இணையப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர். - படம்: பிக்சாபே
Google News Preferred Icon

சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் வேலை அனுமதி அட்டை வைத்திருப்போரின் சிங்பாஸ் கணக்குகள் தொடர்பான விவரங்களை மோசடியாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் 25, 47 வயதுடைய இரு மலேசிய ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 21 முதல் 25ஆம் தேதி வரை நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையின்போது, சிங்பாஸ் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புப் பிரிவின் உதவியோடு காவல்துறையின் இணையப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இரு மலேசியர்களும் சிங்கப்பூரிலுள்ள கைப்பேசி விற்பனைக் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் ஆவர். அவர்கள் தங்களது வேலையைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களின் சிங்பாஸ் கணக்குகளை அனுமதியின்றி பெற்றுக்கொண்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

புதிய சிம் அட்டை வாங்க வந்த வாடிக்கையாளரிடம், அவரது சிங்பாஸ் கணக்கோடு இணைக்கப்பட்ட கைப்பேசி எண்ணைப் புதுப்பித்துத் தருவதாக அந்த இருவரில் ஒருவர் கூறியுள்ளார். ஆனால், வாடிக்கையாளருக்குத் தெரியாமலேயே அவர் பெயரில் ‘லிக்விட்பே’ கணக்கு ஒன்றை அவர் உருவாக்கியுள்ளார்.

2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் முதல், பல்வேறு பண மோசடிகள் மூலம் பெறப்பட்ட $110,063 பணத்தைப் பெற்றதாகச் சந்தேகிக்கப்படும் ‘லிக்விட்பே’ கணக்குகளைப் பதிவு செய்த குற்றத்துக்காகக் குறைந்தபட்சம் 20 சிங்கப்பூர்க் குடிமக்களிடமும் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணையில், அவர்களில் பலர் தங்கள் பெயரில் கணக்கு தொடங்கப்பட்டதையோ அதன் பயன்பாட்டையோ அறியாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

தொடர் விசாரணையில், மேலும் 171 சிங்கப்பூர்க் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் சிங்பாஸ் கணக்குகள் இந்தச் சட்டவிரோத நடவடிக்கையுடன் இணைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இவ்வாறு மோசடியாகப் பெறப்பட்ட சிங்பாஸ் கணக்குகளைப் பயன்படுத்தி, கணக்கு வைத்திருப்பவர்களுக்குத் தெரியாமல் 160க்கும் மேற்பட்ட கூடுதல் ‘லிக்விட்பே’ கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட அனைத்து ‘லிக்விட்பே’ கணக்குகளும் தற்போது முடக்கப்பட்டுள்ளன.

குற்றச்செயல்கள் மூலம் கிடைத்த சட்டவிரோதப் பணத்தைத் தக்கவைக்க பிறருக்கு உதவிய குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்ட இருவரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, $500,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அதே வேளையில், தங்களின் சிங்பாஸ் தகவல்களைத் தாங்களாகவே முன்வந்து மற்றவர்களிடம் ஒப்படைத்த சிங்கப்பூர்வாசிகளிடமும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றச்செயல்களுக்குப் பயன்படும் வகையில் சிங்பாஸ் தகவல்களைப் பிறரிடம் பகிர்வது சட்டப்படி குற்றமாகும் என்று பொதுமக்களுக்கு நினைவுறுத்தப்படுகிறது. மேலும், சிங்பாஸ் கணக்குகள் அல்லது தகவல்களைக் கொடுத்து விரைவாகப் பணம் சம்பாதிக்கும் ஆசையில் பொதுமக்கள் விழவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
குற்றம்சிங்பாஸ்கைது