கேலாங் காப்பிக் கடையில் புதன்கிழமை (மார்ச் 8) காலை ரத்தம் வழிவதுகூட தெரியாமல் சண்டை போட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களில் 32 வயது ஆடவர் டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பின்னர், பொது இடத்தில் சண்டை போட்டதற்காகவும் போதைப்பொருள் குற்றங்கள் என சந்தேகிக்கப்படும் குற்றச்செயல்களுக்காகவும் அவர் கைது செய்யப்பட்டார். இரண்டாமவரான 37 வயது ஆடவர், பொது இடத்தில் சண்டையிட்டதற்காகவும் பொது அமைதியைக் கெடுத்ததற்காவும் கைது செய்யப்பட்டார் என காவல்துறை தெரிவித்தது.
லோரோங் 17 கேலாங்கில் காலை 8.10 மணியளவில் அந்த வட்டாரத்தில் கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பு சண்டை நடந்தது என்று சீன மொழி நாளிதழ் ஷின் மின் குறிப்பிட்டது.
ஒன்பது மணியளவில் கடைக்கு வந்தபோது காவல்துறை அதிகாரிகள் பலர் அங்கு இருந்ததைப் பார்த்ததாக 'பாக் குவா' கடை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
காப்பிக் கடையில் இருந்த மேசைகள், தரை, கை கழுவும் இடங்களில் ரத்தக் கறைகள் காணப்பட்டன. காவல்துறை விசாரணை தொடர்கிறது.

