தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமானத்தில் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் இருவர் கைது

2 mins read
f3e47e36-e875-4250-a4ce-35798bda1fe7
சந்தேகத்துக்குரியவரைக் கண்டறிந்த காவல்துறை அதிகாரி இம்ரான் முகம்மது ஹஜர். - படம்: லாவண்யா வீரராகவன்

விமானத்தில் சக பயணியிடமிருந்து பணம், வங்கி அட்டை ஆகியவற்றைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் சீன நாட்டவர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வயது முறையே 35, 40.

திங்கட்கிழமை (ஜூன் 2) மாலை கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் வந்த விமானத்தில் அவர்கள் $169 ரொக்கத்தையும் இரு கடன் அட்டைகளையும் திருடியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இருவரும் புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து அதே விமானத்தில் பயணம் செய்த காவல்துறை அதிகாரியும் அவரது மனைவியும் அளித்த விவரங்கள், புகைப்படங்கள், கண்காணிப்பு கேமராப் பதிவு ஆகியவற்றின் உதவியுடன் விமான நிலைய அதிகாரிகள் ஒரு மணி நேரத்தில் அவ்விருவரையும் கைது செய்தனர்.

ஜுரோங் ஈஸ்ட் அக்கம்பக்கக் காவல் நிலைய அதிகாரி இம்ரான் முகம்மது ஹஜரும் அவரது மனைவியும், விமானம் புறப்படுவதற்குச் சில மணித்துளிகள் முன்பு வரை அந்த 35 வயதுப் பயணி அங்குமிங்கும் நடந்ததும் இவர்கள் கவனிப்பதைக் கண்டவுடன் சென்று அமர்ந்ததும் அவர் மீது சந்தேகத்தை எழுப்பியதாகக் கூறினர்.

“என் பணிக்கே உரிய உள்ளுணர்வு அவரது நடவடிக்கைகளைச் சந்தேகித்தது. எனினும், அது யாருடைய பை என்று உறுதியாகத் தெரியாததால் முழுப் பயணத்தின்போதும் அவரைக் கவனித்தேன்,” என்றார் இம்ரான்.

விமானத்திலிருந்து இறங்கும்போது அந்தப் பையை மற்றொரு பயணி எடுப்பதைக் கண்டவுடன் இவர்களுக்குச் சந்தேகம் வலுத்தது. பைகளை எடுக்கும் இடத்தில் அந்தப் பைக்கு உரிய பெண்ணைக் கண்ட இந்த இணையர், நடந்ததை விளக்கிக் கூறி, பையில் அவர் வைத்திருந்த பொருள்களைச் சோதிக்கக் கூறினர்.

சந்தேகித்தபடியே பணமும் அட்டைகளும் காணவில்லை என்பதால் திருட்டு நடந்திருப்பதை மூவரும் உறுதிசெய்தனர். சந்தேகத்துக்குரியவரை இணையர் புகைப்படம் எடுத்திருந்ததால், உடனடியாக விமான நிலையக் காவல் அதிகாரிகளை அணுகினர்.

சிங்கப்பூரில் அடுத்த விமானம் ஏறக் காத்திருந்த அந்த ஆடவரையும், அவரது கூட்டாளியென நம்பப்படும் மற்றொருவரையும் சாங்கி விமான நிலைய முதல் முனையத்தின் பயணிகள் இடைநிறுத்தப் பகுதியில் விமான நிலையக் காவல் பிரிவினர் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் மலேசிய நாட்டவராக இருக்கலாம் என்று கூறிய அதிகாரி இம்ரான், “சிங்கப்பூரில் பணியாற்ற வந்த அவருக்கு, இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என் மனைவி அவரை அமைதிப்படுத்தினார். எங்களால் இயன்ற உதவியைச் செய்தோம்,” என்றார்.

பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

“சக பயணிகளின் உடனடிச் செயல்பாடுகளும், விரிவான சாட்சியங்களும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உதவியது,” என்றார் விமான நிலையக் காவல்துறைத் தளபதி, காவல்துறை உதவி ஆணையர் மாலதி முத்துவேலன்.

கைதான இருவரும் திட்டமிட்டுத் திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்டதற்காக விசாரிக்கப்படவுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையோ அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்