தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டு ஊழியர்கள் குற்றம் செய்யத் தூண்டியது தொடர்பில் இருவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
உரிய அனுமதி பெறாமல் பொது ஒன்றுகூடல்களுக்கும் ஏற்பாடு செய்தனர்
1017fb4f-c0f5-405a-983a-964c8f866708
செவ்வாய்க்கிழமை (மே 27) அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். - படம்: பிக்சாபே

சிங்கப்பூரில் உரிய அனுமதியின்றி பொது இடங்களில் ஒன்றுகூடல்களுக்கு ஏற்பாடு செய்ததாக அல்லது அத்தகைய ஏற்பாடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுவது தொடர்பில் செவ்வாய்க்கிழமை (மே 27) சிங்கப்பூரர்கள் இருவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஒரு நிறுவனத்துக்குத் தரப்படவேண்டிய கட்டணத்தொகையைக் கோரும் வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு வெளிநாட்டு ஊழியர்களைக் கட்டுமானத் தலங்களில் அவர்கள் ஒன்றுகூடச் செய்ததாகக் கூறப்பட்டது.

ஏபெக்ஸ் இஞ்சினியரிங் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றிய ரெபெக்கா ரூபிணி ரவீந்திரன், 33, மீது மொத்தம் 17 குற்றச்சாட்டுகளும் வீ டெர்ரிக் மகேந்திரன், 36, மீது 11 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.

அனுமதியின்றி பொது ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்தததாக ரெபெக்கா மீது இரண்டு குற்றச்சாட்டுகளும் அதற்கு உடந்தையாக இருந்ததாக வீ மீது இரண்டு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.

வேலை அனுமதிச் சீட்டில் உள்ள நிபந்தனைகளை மீறும் நடவடிக்கையில் ஈடுபடத் தூண்டியதாக ரெபெக்கா மீது மேலும் 15 குற்றச்சாட்டுகளும் வீ மீது ஒன்பது குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.

2024ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கும் 11.30 மணிக்கும் இரு பொது ஒன்றுகூடல்களுக்கு ரெபெக்கா ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது.

ஏபெக்ஸ் இஞ்சினியரிங் நிறுவன ஊழியர்கள் அறுவரை ஜாலான் சாடுவில் உள்ள கட்டுமானத் தலத்தில் பதாகைகளுடன் கூடும்படி அவர் உத்தரவிட்டதாகவும் மேலும் ஒன்பது பேரைத் தெங்கா கார்டன் வாக் கட்டுமானத் தலத்தில் கூடச் சொன்னதாகவும் கூறப்பட்டது.

அந்தப் பதாகைகளைத் தயாரிப்பதற்கும் ஊழியர்கள் ஒன்றுகூடலை ஒருங்கிணைக்கவும் வீ உதவியதாகச் சொல்லப்படுகிறது.

மேலும், தெங்கா கார்டன் வாக் கட்டுமானத் தலத்தில் ஊழியர்கள் அவ்வாறு செய்தனரா என்று அவர் மேற்பார்வையிட்டதாகவும் நிலைமையை ரெபெக்காவிற்கு அவ்வப்போது தெரிவித்து அவரது உத்தரவுகளை ஊழியர்களுக்கு உடனுக்குடன் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பில் ரெபெக்கா, வீ இருவரும் ஜூன் 24ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்திற்கு வருவர் என்று தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையும் மனிதவள அமைச்சும் மே 26ஆம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கையில் அந்த ஊழியர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் முதலாளியின் உத்தரவின் பேரில் செயல்பட்டதாகவும் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கையில் ஈடுபடும் எண்ணம் அவர்களுக்கு இல்லை என்றும் காவல்துறை விசாரித்து, உறுதிசெய்திருப்பது அதற்குக் காரணம்.

உரிய அனுமதியின்றி பொது ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் $5,000 வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.

வெளிநாட்டு ஊழியர்கள் அவர்களின் வேலை அனுமதிச் சீட்டுக்கான நிபந்தனைகளை மீறுவதற்கு உடந்தையாக இருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் 12 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனையோ $10,000 வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்