தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிராங்கூன் ரோடு நகைக் கடையில் $12,000 நகை திருடிய ஆடவர் கைது

2 mins read
31143614-2031-4c92-87b7-09860e6bf2e4
திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைதான ஆடவரிடம் இருந்து மீட்கப்பட்ட ரொக்கப் பணம். - படம்: காவல்துறை

சிராங்கூன் ரோட்டில் உள்ள நகைக் கடை ஒன்றில் தங்கக்காப்பு (பிரேஸ்லெட்) ஒன்றை திருடியதாக 26 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அது குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) பிற்பகல் 3.35 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.

நகைக் கடையில் பணம் செலுத்தாமல் $12,000 மதிப்புள்ள தங்கக்காப்பை அந்த ஆடவர் எடுத்துச் சென்றதாக புகார் வந்ததைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் அவரை காவல்துறை தேடிப் பிடித்து கைது செய்தது.

தங்கக்காப்பு வாங்குவதுபோல பாசாங்கு செய்த ஆடவர், அதனை தமது கையில் அணிந்து அழகு பார்த்தார்.

நகைக் கடை ஊழியர் வேறு ஒரு வாடிக்கையாளருக்கு சேவை செய்துகொண்டு இருந்தபோது, அவர் அங்கிருந்து அந்த நகையுடன் மெதுவாக நழுவிவிட்டார்.

ஆரம்பகட்ட விசாரணையில் இந்த விவரம் தெரிய வந்தது.

அந்தச் சம்பவம் தொடர்பில் $4,900க்கும் மேற்பட்ட ரொக்கம், கைப்பேசி, மடிக்கணினி ஆகியவற்றைக் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

மற்றொரு திருட்டுச் சம்பவம் பீச் ரோட்டில் நிகழ்ந்தது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் அன்பளிப்புத் தொகைகளைத் திருடிய குற்றத்திற்காக கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 7) 36 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சிவப்பு நிற அன்பளிப்பு உறைகள் நிறைந்த இரண்டு பெட்டிகளை அவர் களவாடியதாகவும் அந்தப் பெட்டிகளில் $50,000 இருந்ததாகவும் நம்பப்படுகிறது.

பீச் ரோட்டு ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற அந்தச் சம்பவம் குறித்து கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 5) பிற்பகல் 12.49 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.

அப்போது அவரிடமிருந்து $3,000 ரொக்கம் மீட்கப்பட்டதாகவும் அது தெரிவித்தது.

திருடும் நோக்கத்துடன் சம்பவ இடத்திற்குச் சென்ற ஆடவர், திருடிய பின்னர் தமது உடைகளை மாற்றிக்கொண்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் சம்பந்தபட்ட ஆடவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட உள்ளது.

குறிப்புச் சொற்கள்