சிறுவனைக் காப்பாற்றிய இரண்டு வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பாராட்டு

சிறுவனைக் காப்பாற்றிய இரண்டு வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பாராட்டு

2 mins read
704fe68b-440e-4915-969b-86e54bf74416
கேன்பரா ரோடு, புளோக் 350சியின் 3வது மாடி விளிம்பில் நின்று கொண்டிருந்த சிறுவனை காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர். - படம்: கோப்புப் படம்

சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை விருது வழங்கி கௌரவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று (அக்டோபர் 25) லாரி ஓட்டுநரான ஜாஹிருக்கும் சாயம் அடிக்கும் ஊழியரான சா தூ யா அங் என்பவருக்கும் சமூக உயிர்க்காப்பு விருது வழங்கப்பட்டது.

இம்மாதம் அக்டோபர் 20ஆம் தேதி கேன்பரா ரோட்டில் உள்ள புளோக் 350சியின் 3வது மாடியின் விளிம்பில் மூன்று வயது சிறுவன் நின்று கொண்டிருந்ததைக் கொண்டு அங்கு வந்த பலர் அதிர்ச்சியடைந்தனர்.

அப்போது அவ்வழியாகச் சென்ற சிங்கப்பூரில் 16 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் பங்ளாதேஷ் நாட்டவரான ஜாஹிர், சிறுவன் ஆபத்தான நிலையில் இருப்பதைக் கண்டு பதறினார்.

“சிறுவனைப் பார்த்ததும் பங்ளாதேஷில் உள்ள என்னுடைய ஏழு வயது மகனின் நினைவு வந்தது. எப்படியாவது சிறுவனைக் காப்பாற்ற வேண்டும் என்று தோன்றியது,” என்று ஜாஹிர் தெரிவித்தார்.

மூன்றாவது மாடியில் உள்ள வீட்டுக்கு ஓடி அவர் கதவைத் தட்டினார். யாரும் திறக்கவில்லை. ஜாஹிர் தவித்துக் கொண்டிருந்தபோது மியன்மார் ஊழியரான 26 வயது சா தூ யா அங் உதவி செய்ய முன்வந்தார்.

இருவரும் ஒருவரை ஒருவர் தூக்கிவிட்டனர். இதில் தூ யா 3வது மாடி விளிம்பில் ஏறி விட்டார்.

அவர், சுவரைப் பிடித்துக் கொண்டு சிறுவனை நோக்கி நகர்ந்தார். இதற்குள் கீழே இருந்த சிலர் ஒரு வெள்ளைப் போர்வையை பிடித்துக் கொண்டிருந்தனர்.

விளிம்பில் அவர் நிற்பதற்குக்கூட இடமில்லாமல் மெதுவாகச் சென்று சிறுவனைப் பிடித்தார்.

பின்னர் ஒரு வீட்டின் திறந்திருந்த சன்னல் வழியாக சிறுவனை அவ்வீட்டுக்குள் விட்டார். “சிறுவன் பயத்தில் இருந்தான். அவனது கை குளிர்ந்து இருந்தது. என்னுடைய தோளை இறுகப் பற்றிக் கொண்டான்,” என்று சா தூ யா கூறினார்.

சனிக்கிழமை, ஈசூன் தொழிற்பேட்டை பார்க் ‘ஏ’யில் நடந்த நிகழ்ச்சியில் அவர்களுடைய தைரியமான செயலைப் பாராட்டி குடிமைத் தற்காப்புப் படையின் 3வது பிரிவு அவர்களை கௌரவப்படுத்தியது.

மியன்மாரைச் சேர்ந்த சா தூ யா அங் (இடம்), பங்ளாதேஷ் நாட்டவரான ஜாஹிர் ஆகிய இருவருக்கும் சமூக உயிர்க்காப்பு விருது வழங்கப்பட்டது.
மியன்மாரைச் சேர்ந்த சா தூ யா அங் (இடம்), பங்ளாதேஷ் நாட்டவரான ஜாஹிர் ஆகிய இருவருக்கும் சமூக உயிர்க்காப்பு விருது வழங்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்