சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு முதல் மேலும் இரண்டு புதிய தனியார் வாடகை கார் சேவை நிறுவனங்கள் சேவை வழங்கவுள்ளன.
டிரான்ஸ் கேப் சர்வீஸ், ஜியோ லா ஆகிய நிறுவனங்களுக்கு அந்த உரிமம் வழங்கியுள்ளது நிலப் போக்குவரத்து ஆணையம்.
சிங்கப்பூரில் மூன்றாவது பெரிய டாக்சி சேவையை வழங்கும் டிரான்ஸ் கேப்பிடம் 2,079 வாகனங்கள் உள்ளன. ஜியோ லா நிறுவனம் கைப்பேசிச் செயலி வழி சொகுசு கார் சேவை மற்றும் பொட்டலங்கள் விநியோகம் ஆகியவற்றில் உள்ளது.
சிங்கப்பூரில் ஏற்கெனவே கிராப், ரைட், டடா, கோஜெக், ஜிக் உள்ளிட்ட நிறுவனங்கள் வாடகை கார் சேவைகளை வழங்கி வருகின்றன. மேலும் இந்நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு உரிமங்களை நிலப் போக்குவரத்து ஆணையம் புதுப்பித்துள்ளது.
புதிய உரிமம் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் நடப்புக்கு வரும்.
இந்தத் தகவலை நிலப் போக்குவரத்து ஆணையம் அறிக்கை மூலம் திங்கட்கிழமை வெளியிட்டது.
டிரான்ஸ் கேப், ஜியோ லா நிறுவனங்களுக்கு வழங்கிய ஓராண்டுக்கான தற்காலிக உரிமம் அவர்களது செயல்பாடுகளை மேம்படுத்தவும் நிலப்போக்குவரத்து ஆணையத்தின் பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்ற உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், டாக்சி ஓட்டுநர்களுக்கான தொழில்முறை உரிமமும் எளிதாக கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. அது வரும் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் நடப்புக்கு வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
தொழில்முறை உரிமமும் எளிதாக கிடைப்பதால் ஓட்டுநர்கள் பலரால் டாக்சி ஓட்டமுடியும் என்று நிலப்போக்குவரத்து ஆணையம் கூறியது.
தற்போது டாக்சி ஓட்டுநர் உரிமம் பெற 16 மணி நேர பயிற்சியை முடிக்க வேண்டும். அது அடுத்த ஆண்டில் 12 மணி நேரமாக குறைகிறது.