ஹவ்காங்கில் புதன்கிழமை (மே 27) மாலை ஒரு காருடன் மோதிய விபத்தில் காயமடைந்த மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அப்பர் சிராங்கூன் சாலை, ஹவ்காங் அவென்யூ 7 சந்திப்பில் நிகழ்ந்த விபத்து குறித்து அன்று மாலை 6.20 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
விபத்தில் காயமடைந்த 32 வயது மோட்டார்சைக்கிளோட்டி, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையால் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார். அவர் விசாரணைக்கு உதவி வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். அவர் உணவு விநியோக ஊழியர்போல தெரிகிறது.
எஸ்ஜி ரோடு விஜிலாண்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொளியில், சாலைச் சந்திப்பில் ஹவ்காங் அவென்யூ 7ஐ நோக்கி வலதுபுறமாக ஒரு கார் திரும்புவது தெரிந்தது.
அப்பர் சிராங்கூன் சாலையில் எதிர்த்திசையிலிருந்து வந்துகொண்டிருந்த மோட்டார்சைக்கிள், அந்த கார் திரும்பிச் செல்வதற்குள் அதன்மீது மோதியது.
இதனால் அந்த மோட்டார்சைக்கிளோட்டி, காரின்மீது தூக்கி வீசப்பட்டு மறுபுறத்தில் விழுந்தார். மோட்டார்சைக்கிளின் சிதைவுகளும் அதிலிருந்த மற்ற பொருள்களும் சாலையில் சிதறிக் கிடந்தன.
அங்கிருந்த வழிப்போக்கர்கள் சிலர் மோட்டார்சைக்கிளோட்டிக்கு உதவ விரைந்தனர்.
பின்னர், மருத்துவ உதவியாளர்கள் நால்வர், அருகில் தூக்குப்படுக்கையுடன் அந்த மோட்டார்சைக்கிளோட்டிக்கு உதவுவது காணொளியில் பதிவானது.
தொடர்புடைய செய்திகள்
அதே தினம், கிளமெண்டியில் ஒரு மோட்டார்சைக்கிளும் ஒரு காரும் சம்பந்தப்பட்ட மற்றொரு விபத்தில் காயமுற்ற 43 வயது மோட்டார்சைக்கிளோட்டி, சுயநினைவுடன் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
கிளமெண்டி அவென்யூ 2, காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட் சந்திப்பில் நிகழ்ந்த அந்த விபத்து குறித்து அன்று மாலை 6 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
அந்த மோட்டார்சைக்கிளோட்டி விசாரணைக்கு உதவி வருவதாகக் காவல்துறை கூறியது.

