மத்திய சேம நிதிக் கணக்குகள் மோசடியில் சிக்காமல் இருக்க இரண்டு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நாளுக்கு நாள் மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மத்திய சேம நிதிக் கணக்கு வைத்துள்ள உறுப்பினர்கள் அவர்களது சேமிப்புகளைப் பாதுகாப்பாக வைக்க அவை உதவும்.
முதல் வசதி சேஃப்டி சுவிட்ச் (Safety Switch) என்று அழைக்கப்படும் பாதுகாப்பு அம்சம். இது 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கானது.
கணக்கில் சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனை, தனிநபர் தகவல் திருட்டு ஏதேனும் நடந்தால் உடனே சேஃப்டி சுவிட்ச் அம்சம் அதைத் தடுக்கும்.
இதனால் மசே நிதிக் கணக்கு முடங்கும். பின்னர் அதிகாரிகளின் உதவியுடன் கணக்கை பிரச்சினை இன்றி மீட்கலாம்.
1800-227-1188 என்ற எண்ணுக்கு அழைத்து சேஃப்டி சுவிட்ச் வசதியைப் பயன்படுத்தலாம்.
இரண்டாவது வசதி நம்பிக்கையான நியமனதாரர் அறிவிப்புச் சேவை. இது 21 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது பிரிவினருக்கானது.
கணக்கு வைத்துள்ள உறுப்பினர் தங்களுக்கு நம்பிக்கைக்குரிய இரண்டு நபர்களைத் தேர்ந்தெடுக்கலாம். கணக்கில் திடீரென பெருந்தொகை பரிவர்த்தனை ஏதும் நடந்தால் அந்த இருவருக்கும் தகவல் செல்லும்.
இந்த இரண்டு புதிய வசதிகள் தொடர்பான மேல் விவரங்களை மத்திய சேம நிதி அலுவலகங்களில் தெரிந்துகொள்ளலாம். அல்லது அதன் இணையத்தளத்தை நாடலாம்.

