சிங்கப்பூரில் ஆடவர் இருவருக்கு கிளேட் 1பி வகை எம்பாக்ஸ் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தொற்றுநோய் அமைப்பு வியாழக்கிழமை (ஏப்ரல் 2) அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
அவ்விருவருக்கும் பெரும்பாலும் பாலியல் நடவடிக்கைகளின் மூலம் கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அமைப்பு குறிப்பிட்டது.
பொதுமக்களிடையே எம்பாக்ஸ் கிருமித்தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் குறைவு என்று அமைப்பு சொன்னது. பொதுவாக உடல் ரீதியிலான நெருக்கம் அல்லது அதிக நேரத்துக்குத் தொடர்பில் இருக்கும்போதுதான் எம்பாக்ஸ் கிருமித்தொற்று ஏற்படும் என்பதே அதற்குக் காரணம் என்றும் அமைப்பு விவரித்தது. பாலியல் நடவடிக்கைகளும் அதுபோன்ற உடல் ரீதியான தொடர்பு நடவடிக்கைகளில் அடங்கும்.
அதனால் பெரிய அளவில் மக்களுக்குத் தடுப்பூசி போடத் தேவையில்லை என்றும் அமைச்சு சுட்டியது. பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் அதிகம் இருக்கும் நெருநெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்குத் தடுப்பூசி போட பரிந்துரைக்கப்படும்.
கிருமித்தொற்றுக்கு ஆளான இருவரில் முதல் நபருக்கு வயது 30. அவர் அண்மையில் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை. அண்மையில் பாலியல் தொடர்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி அவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன. மார்ச் 30 அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு எம்பாக்ஸ் கிளேட் 1பி கிருமித்தொற்று ஏற்பட்டது மார்ச் 31ஆம் தேதி பரிசோதனைகளில் தெரிய வந்தது.
இப்போது அவர் மருத்துவமனையிலிருந்து வெளிவந்துள்ளார். இம்மாதம் 20ஆம் தேதி வரை அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்பட்ட மற்றொருவர் ஒரு 34 வயது ஆடவர். அண்மையில் தான் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதாகவும் பாலியல் தொடர்பிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
எம்பாக்ஸ் தொற்றுக்கு ஆளான முதல் நபருடன் அவர் அதிக நேரம் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறார். அவரிடம் நோய்க்கான அறிகுறிகள் மார்ச் 26ஆம் தேதி தென்பட்டன.
மார்ச் 31ஆம் தேதி அவர் மருத்துவ உதவியை நாடினார். ஏப்ரல் முதல் தேதி அவருக்கு எம்பாக்ஸ் கிளேட் 1பி கிருமித்தொற்று ஏற்பட்டது உறுதியானது.
அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் இம்மாதம் 21ஆம் தேதி வரை அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

