தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுவா சூ காங்கில் துன்புறுத்தலுக்கு ஆளானதாக இரு கட்சியினர் குற்றச்சாட்டு

2 mins read
274f0a32-d727-4834-bb84-c9b06ff070fc
புக்கிட் கொம்பாக் பகுதியிலுள்ள ‘குட்வியூ கார்டன்ஸ்’ புளோக்குகளுக்குச் சென்ற தமது கட்சியின் சுவா சூ காங் குழுவை, மசெக தொண்டூழியர்கள் பின்தொடர்ந்ததாக பிஎஸ்பி உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார். - படம்: கூகல் மேப்ஸ்

ஆளும் மக்கள் செயல் கட்சி, எதிர்க்கட்சியான சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி ஆகிய இரு கட்சிகளையும் சேர்ந்த தொண்டூழியர்களுக்கு இடையே ஜனவரி 4ஆம் தேதி புக்கிட் கொம்பாக் பகுதியில் அடுத்தடுத்து வாக்குவாதங்கள் நேர்ந்த செய்தி, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அன்று என்ன நடந்தது என்பது குறித்து இரு தரப்பினரும் வெவ்வேறு விதமாகக் கூறியுள்ளதுடன் தாங்கள் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

வட்டாரத்தை வலம்வந்தபோது ‘பிஎஸ்பி’ எனப்படும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி தொண்டூழியர்கள் முதலில் வாக்குவாதத்தை ஆரம்பித்ததாக சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான லோ யென் லிங் ஜனவரி 8ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

மக்கள் செயல் கட்சி அதாவது மசெகவைச் சேர்ந்த தொண்டூழியரை ஆடவர் ஒருவர் வம்புக்கிழுத்து முகத்தில் அறைந்ததாகவும் இன்னொரு தொண்டூழியரை ஆடவர் கேலி செய்ததாகவும் திருவாட்டி லோ அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், ஜனவரி 4ஆம் தேதி ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி உறுப்பினரும் முன்னாள் வேட்பாளருமான எஸ் நல்லகருப்பன் கூறியிருந்ததிலிருந்து இது வேறுபட்டிருந்தது.

புக்கிட் கொம்பாக் பகுதியிலுள்ள ‘குட்வியூ கார்டன்ஸ்’ புளோக்குகளுக்குச் சென்ற தமது கட்சியின் சுவா சூ காங் குழுவை, மசெக தொண்டூழியர்கள் பின்தொடர்ந்ததாக திரு நல்லகருப்பன் கூறியிருந்தார்.

பிஎஸ்பி தலைவர் டான் செங் போக் ஜனவரி 8ஆம் தேதி பதிவேற்றம் செய்த காணொளி ஒன்றில், ஆடவர் ஒருவர் பிஎஸ்பி தொண்டூழியர்களுக்கு மிக அருகில் இருந்தவாறு கைப்பேசியைக் கொண்டு காணொளி எடுப்பதாக அமைந்துள்ளது. ஆனால், அந்த ஆடவர் மசெக தொண்டூழியரா என்பது உறுதி செய்யப்படவில்லை.

இதற்கிடையே, பிஎஸ்பி தொண்டூழியர் ஒருவர் சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

மசெக தொண்டூழியர்கள் துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிப்பதைத் தம் குழு ஆலோசித்ததை அடுத்து பின்னர் வேண்டாம் என்று முடிவெடுத்ததாக திருவாட்டி லோ கூறினார்.

இருப்பினும், காவல்துறை விசாரணை மேற்கொண்ட பிறகு, உண்மையில் என்ன நடந்தது என்பதை மக்கள் அறிந்துகொள்வர் என்பதைத் தாம் எதிர்பார்ப்பதாக திருவாட்டி லோ குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்