மதுபோதையில் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தபோது உறங்கியதாக நம்பப்பட்ட இருவர் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
சந்தேக நபர்களான மார்க்கஸ் லியூ சூ லின், 28, வோரா தைய்னிக் நர்ஷிபாய், 35, ஆகியோர்மீது மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகவும் பிறருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனத்தை நிறுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் லியூ மதுபோதையில் வேன் ஓட்டினார். பிறகு லோரோங் 1 கேலாங்கில் நான்கு தடச் சாலையின் மூன்றாவது தடத்தில் அவர் வேனை நிறுத்தினார்.
வியாழக்கிழமை லியூவின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. அவருக்கு 4,600 வெள்ளி அபராதமும் வாகனம் ஓட்ட 30 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டது.
ஜூலை 12ஆம் தேதி வோரா நிக்கல் விரைவுச்சாலையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக நம்பப்படுகிறது. அன்று அதிகாலை 1.30 மணியளவில் அவர் கில்மார்ட் ரோட்டை நோக்கிச் செல்லும் நிக்கல் விரைவுச்சாலையின் பகுதியில் தான் ஓட்டிய காரை, பிறருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அவரின் வழக்கு விசாரணை வரும் அக்டோபர் மாதம் 15ஆம் தேதி தொடரும்.


