பொய்யான ஆவணங்களை 2013 முதல் 2018 வரையில் தயாரித்த 13 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய நிதி தணிக்கைச் சேவை நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான சிங்கப்பூரர் ஆர். சண்முகரத்னம், 59, குற்றவாளி என்று திங்கள்கிழமை (செப்டம்பர் 22) தீர்ப்பளிக்கப்பட்டது.
அவருக்கு உடந்தையாக 2017ல் ஐந்து கடிதங்களை எழுதி ஆவணங்களை சமர்ப்பிக்க உதவிய ஜேம்ஸ் ஹென்றி ஓ சலிவன், 50, என்ற பிரிட்டனைச் சேர்ந்தவரும் குற்றவாளி என்று தீர்ப்பானது.
குறிப்பிடப்பட்ட 3 வருடகாலம் சண்முகரத்னம், சிட்டடெல் கார்பரெட் சர்விசஸ் எனும் நிதித் தணிக்கை நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றினார். அச்சமயம், ஜெர்மனியில் தற்போது நொடித்துப்போன ‘வையர்கார்ட்’ மற்றும் அது சார்ந்த மின்கட்டணச் சேவை நிறுவனங்களுக்கு மூன்று நிதியாண்டுகள் இயங்கக்கூடிய $1.7 பில்லியன் (1.1 பில்லியன் பவுன்) மதிப்புள்ள நிதிக்கான வைப்புகள் சிட்டடெல் நிறுவனத்திடம் உள்ளதாக 13 உறுதிக் கடிதங்களை வழங்கியுள்ளார்.
இவ்விருவருக்கும், இன்டர்போல் எனும் அனைத்துலக காவல் அமைப்பு தேடிவரும் வயர்கார்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ரஷ்ய உளவாளி யான் மர்சலெக்குடன் தொடர்புள்ளதாக நம்பப்படுகிறது.