ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக் ஒன்றின் 13வது தளத்தில் இருக்கும் வீட்டில் தீ மூண்டது.
சம்பவம் ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 81ல் உள்ள புளோக் 842ல் புதன்கிழமை (ஜூன் 17) அதிகாலை நிகழ்ந்தது. தீ எரிந்துகொண்டிருந்தபோது இருவர் அந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்டனர்.
புதன்கிழமை அதிகாலை 3.35 மணியளவில் சம்பவம் குறித்துச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது. தீ மூண்ட வீட்டில் நால்வரைக் கொண்ட குடும்பம் இருந்தது. அங்கிருந்து இருவர் மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட இருவரும் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் சுமார் 40 குடியிருப்பாளர்கள், புளோக்கில் உள்ள சில வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை தெரிவித்தது.
வீட்டின் படுக்கையறை ஒன்றில் ஏற்பட்ட மின்சாரக் கோளாற்றால் தீ மூண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீ மூண்டபோது வீட்டில் குடும்பத்தார் உறங்கிக்கொண்டிருந்ததாக எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் சீன ஊடகமான சாவ்பாவ் தெரிவித்தது. அதன் செய்தியாளர்கள் சம்பவ இடத்துக்கு புதன்கிழமை மாலை நான்கு மணியளவில் நேரில் சென்றனர்.
வீட்டின் சுவர்களும் கூரைச் சுவரும் தீயால் கறுகிப்போனதாகவும் சன்னல்கள் உடைந்திருந்ததாகவும் சாவ்பாவ் தெரிவித்தது.

