உரிமமின்றி பணம் அனுப்பியதற்காக இருவருக்குச் சிறைத்தண்டனை

உரிமமின்றி பணம் அனுப்பியதற்காக இருவருக்குச் சிறைத்தண்டனை

வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து $10 மில்லியன் வசூலிக்கப்பட்டது.
படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

03 Jul 2026 - 8:01 pm

1 mins read

வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சொந்தமான 60க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளிலிருந்து $10.2 மில்லியனை உரிமமின்றி பணம் அனுப்பிய செயலில் ஈடுபட்ட, இருவருக்கு  வெள்ளிக்கிழமை (ஜூலை 3) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்திய நாட்டவர்களான 33 வயது அங்கப்பன் அறிவழகன், 27 வயது துரைராஜ் குலோத்துங்கன் இருவரும், சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு எடுத்துச் சென்ற பொருள்களை வாங்குவதற்கு அந்த நிதியைப் பயன்படுத்தினர்.

எவ்வகையான பொருள்கள் வாங்கப்பட்டன என்பது நீதிமன்றத்தில் குறிப்பிடப்படவில்லை.

2023ஆம் ஆண்டு ஜூலை மாதம், பிளாசா சிங்கப்பூராவில் உள்ள ஏடிஎம் இயந்திரம் ஒன்றில் துரைராஜ் வெவ்வேறு அட்டைகளைப் பயன்படுத்தி பெருந்தொகையை எடுப்பதைக் கவனித்த பொதுமக்களில் ஒருவர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தபோது, ​​அவர்களது செயல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

அவர் கைது செய்யப்பட்ட பிறகு, அவரிடமிருந்து 51 ஏடிஎம் அட்டைகளையும், கிட்டத்தட்ட $75,000 ரொக்கப் பணத்தையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.

உறவினரான அவர்கள், பணம் செலுத்தும் முறைகள் சட்டம் மற்றும் முறைகேடான கணினி பயனீட்டுச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

2012 முதல் சிங்கப்பூரில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த அங்கப்பனுக்கு 15 மாதங்கள் மற்றும் மூன்று வாரங்கள் சிறைத்தண்டனையும், $6,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அதேசமயம், துரைராஜுக்கு எட்டு மாதங்கள் மற்றும் மூன்று வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது .

குறிப்புச் சொற்கள்
வெளிநாட்டு ஊழியர்தண்டனைபணம்சட்டம்