எதிர்த்தரப்பு அரசியல்வாதியான லிம் தியென் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குத் தப்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு சதி செய்ததாக இரண்டு சிங்கப்பூரர்கள் மீது இன்று (ஆகஸ்ட் 8) குற்றம் சுமத்தப்பட உள்ளது.
நீதிக்கு எதிராகச் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் அந்த இருவரில் ஒருவர் 37 வயதுடையவர். மற்றவரின் வயது 44.
லிம் தியென் சட்டவிரோதமாக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்குத் தப்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய அந்த இரு ஆடவர்களும் சதித்திட்டம் தீட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை தெரிவித்துள்ளது.
வழக்கறிஞருமான லிம், தமக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையைத் தொடங்க ஆகஸ்ட் 3ஆம் தேதி சரண்டைந்திருக்க வேண்டும். சட்டபூர்வ சான்றிதழ் எதுவுமின்றி வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டதற்காக அந்தத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
சட்டத் தொழில் சட்டத்தின்கீழ், லிம்மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகள் 2024 ஜூலையில் நிரூபிக்கப்பட்டன. அதனையடுத்து 2025 பிப்ரவரியில் ஆறு வார சிறைத் தண்டனையும் $1,000 அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டன.
லிம் தியென் கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) மலேசியாவில் அந்நாட்டுக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அவரை சிங்கப்பூருக்குத் திரும்பக் கொண்டுவருவதற்காக, மலேசிய அதிகாரிகளுடன் அணுக்கமாகப் பணியாற்றி வருவதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
வேண்டுமென்றே நீதிக்கு எதிராகச் செயல்பட்டு சதி செய்ததாக ஆடவர் இருவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.


