பாரந்தூக்கியை இயக்குபவரிடமிருந்து $4,000க்கும் அதிகமான லஞ்சம் வாங்கிய இரு ஆடவர்களுக்கு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இருவரும் முன்னாள் செர்ட்டிஸ் அதிகாரிகள்.
32 வயது முகம்மது அஸிஃபி சிலாமாட்டுக்கு ஓராண்டு, எட்டு மாதங்கள் சிறைத் தண்டனையும் $3,450 அபராதமும் விதிக்கப்பட்டன.
ஜூரோங் துறைமுகத்தில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கடத்திய ஆடவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததற்கு அஸிஃபிக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
அதே போன்ற குற்றத்தில் ஈடுபட்டதற்காக 25 வயது முகம்மது கைருல் அமீர் சுஹாய்மிக்கு பத்து மாதங்கள் சிறைத் தண்டனையும் $600 அபராதமும் விதிக்கப்பட்டன.
ஊழல் குற்றத்தில் ஈடுபட்டதையும் அதிகாரபூர்வ ரகசிய சட்டத்தின்கீழ் குற்றம் புரிந்ததையும் இருவரும் ஒப்புக்கொண்டனர்.
அபராத தொகையைச் செலுத்தாவிடில் அஸிஃபுக்கு கூடுதலாக 15 நாள்கள் சிறைத் தண்டனையும் கைருலுக்கு கூடுதலாக மூன்று நாள்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.
2021ஆம் ஆண்டில், ஜூரோங் துறைமுகத்தில் வழக்கம்போல் வாகனங்களைச் சோதனையிட்டபோது பாரந்தூக்கியை இயக்குபவரான 34 வயது முகம்மது சுகாய்மி கசாலியை அஸிஃபி சந்தித்தார். 2023ஆம் ஆண்டில் கைருலைச் சுகாய்மி சந்தித்தார்.
தொடர்புடைய செய்திகள்
2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சுகாய்மி 36 முறை வரிசெலுத்தப்படாத சிகரெட்டுகளை துறைமுகம் வழியாகக் கடத்தினார்.
இது பற்றி தெரிந்தும் சுகாய்மிக்கு எதிராக அஸிஃபியும் கைருலும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இருவரும் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர். சுகாய்மி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

