காவல்துறையினர் இருவர்மீது வெள்ளிக்கிழமையன்று நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டது.
தாங்கள் விசாரித்த சந்தேகப் பேர்வழிகளிடமிருந்து அவர்கள் பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது. அவற்றில் ஒரு வழக்கு 2012ஆம் ஆண்டில் இடம்பெற்றது.
அவ்விரு அதிகாரிகளின் நிதிநிலை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, அந்தச் சந்தேகத்துக்குரிய செயல்கள் வெளிச்சத்துக்கு வந்ததாக சிங்கப்பூர் காவல்துறை அறிக்கை ஒன்றில் கூறியது.
சந்தேகத்துக்குரிய செயல்களைக் கண்டுபிடித்ததும், அவ்விரு அதிகாரிகள் விசாரித்த வழக்குகள் மறுஆய்வு செய்யப்பட்டு, விசாரணைக்காக உள்நாட்டு விவகார அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
முகம்மது முகம்மது ஜலீல், முகம்மது டானியல் முகம்மது நஸாலி ஆகியோரே அந்த இரண்டு அதிகாரிகள்.
முகம்மதின் குற்றங்கள், 2012ஆம் ஆண்டில் அவரது பொறுப்பில் இருந்த வழக்கு தொடர்பானவை. 2013ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சந்தேகப் பேர்வழி ஒருவரிடமிருந்து பெற்ற இழப்பீட்டுத் தொகையை அவர் கையாடியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் தேதி அவர் கைதுசெய்யப்பட்டார். அதே ஆண்டு ஜூலை 16ஆம் தேதி அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அரசாங்க ஊழியராக இருந்தபோது நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டதாக நான்கு குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குகிறார்.
இன்னொருவரான டேனியல், அரசாங்க ஊழியராக இருந்தபோது நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டதாக 23 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். அத்துடன், வாகன நிறுத்தக் கட்டணங்களைச் செலுத்தாததற்காக 74 குற்றச்சாட்டுகளும் போலி ஆவணங்களின் தொடர்பில் 18 குற்றச்சாட்டுகளும் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
தன் பொறுப்பிலிருந்த வழக்குகளை விசாரித்தபோது, டேனியல் சந்தேகப் பேர்வழிகளிடமிருந்து பெற்ற இழப்பீட்டுத் தொகையைக் கையாடியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அவர் ஒருமுறைக்குமேல் தன் மேற்பார்வையாளரிடம் போலி ரசீதுகளைச் சமர்ப்பித்தாகவும் கூறப்படுகிறது. அவர் 2020ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.
அரசாங்க ஊழியர் ஒருவர் நம்பிக்கை மோசடிக் குற்றங்களில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு 20 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.