ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் மக்கள் செயல் கட்சி (மசெக) நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தினேஷ் வாசு தாஸ், ஹஸ்லினா அப்துல் ஹலிம் இருவரும் மறுபடியும் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாண்டுப் பொதுத் தேர்தலில் அவ்விருவரும் மசெகவின் சார்பில் களமிறக்கப்படக்கூடும் என்று நம்பப்படுகிறது. ஈஸ்ட் கோஸ்ட்டில் அவர்கள் காணப்பட்டது அந்த எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை (ஏப்ரல் 5) நடைபெற்ற தொகுதி உலாவின்போது துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் இருவரும் திரு தினேஷ், திருவாட்டி ஹஸ்லினாவை ஈஸ்ட் கோஸ்ட் குடியிருப்பாளர்களிடம் அறிமுகம் செய்தனர். திரு தினேஷ், திருவாட்டி ஹஸ்லினா இருவரும் இரண்டாவது முறையாக ஈஸ்ட் கோஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி உலாவில் காணப்பட்டிருக்கின்றனர்.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி ஈஸ்ட் கோஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சை சீ பள்ளிவாசலுக்குச் சென்றபோது இருவரும் அவர்களுடன் காணப்பட்டனர்.
திரு தினேஷ், ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாகியாவார். அவர், கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் சுகாதார அமைச்சிலும் பணியாற்றினார்; சிங்கப்பூரர்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு ஊக்குவிக்கும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டார்.
‘மேக்-எ-விஷ்’ (Make-A-Wish) அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாகியான திருவாட்டி ஹஸ்லினா, மீடியாகார்ப் நிறுவனத்தின் ரியா 89.7 வானொலிப் படைப்பாளராகத் தனது தொழில்துறைப் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் அவர் தொலைக்காட்சித் துறைக்கு மாறினார்.
ஒருகட்டத்தில் அவர் சிஎன்ஏ ஊடகத்தின் சிங்கப்பூர் செய்தி / நிகழ்ச்சிப் பிரிவுக்கான செய்தி சேகரிப்பு திட்டமிடல் ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார்.
ஈஸ்ட் கோஸ்ட்டில் சனிக்கிழமை நடந்த மசெகவின் தொகுதி உலா மூன்று மணிநேரம் நிடித்தது. சிக்லாப் வட்டாரத்தில் உள்ள மூன்று காப்பிக் கடைகளும் தொகுதி உலாவில் இடம்பெற்றன.
தொடர்புடைய செய்திகள்
திரு தினேஷ், தங்கள் அணியில் சேரக்கூடும் என்று அமைச்சர் டோங், தொகுதி உலாவின்போது மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். திரு டோங்கின்கீழ் உள்ள சிக்லாப், இப்போது ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியுடன் சேர்க்கப்பட்டுள்ளது.
அதேபோல், திருவாட்டி ஹஸ்லினாவின் ஊடக அனுபவம், குடியிருப்பாளர்களுடன் மேலும் நன்றாகத் தொடர்புகொள்ள உதவும் என்றார் துணைப் பிரதமர் ஹெங். குறிப்பாக உலகளவில் நிலையற்ற சூழல்களை சிங்கப்பூர் எதிர்நோக்கும் வேளையிலும் உலக விநியோகச் சங்கிலியில் மாற்றங்கள் இடம்பெறக்கூடிய நிலையிலும் அவரின் ஊடக அனுபவம் கைகொடுக்கும் என்றார் திரு ஹெங்.
பொதுத் தேர்தலில் களமிறக்கப்பட்டால் திரு தினேஷ், திருவாட்டி ஹஸ்லினா இருவரும் தங்களின் தற்போதைய அணியில் சேரும் சிறந்த உறுப்பினர்களாக இருப்பர் என்றும் அவர் குறிப்பிட்டார்.