குறைந்தபட்சக் குடியிருப்புக் காலத்தை நிறைவுசெய்யாத தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளைச்(பிடிஒ) சந்தைப்படுத்திய குற்றத்திற்காக சொத்து முகவர் இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஈசூன் ஸ்திரீட் 51ல் உள்ள வீடமைப்பு வளர்ச்சி கழக வீடு ஒன்றைச் சந்தைப்படுத்திய குற்றத்திற்காகத் திருவாட்டி கிறிஸ்டினா ஆவுக்கு ஜனவரி மாதம் 18ஆம் தேதி $1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
110ஏ டெப்போ ரோட்டில் உள்ள வீடு ஒன்றைச் சந்தைப்படுத்திய குற்றத்திற்காகத் திருவாட்டி இசபெல் லோவுக்குச் செவ்வாய்க்கிழமை $1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அந்த இரு முகவர்களும் வீவக குடியிருப்புகளுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகள், சொத்து முகவர்களுக்கான நெறிமுறைகள், வாடிக்கையாளர் தொழில்முறைப் பராமரிப்பு விதிகள் போன்றவற்றை மீறினர் எனச் சொத்து முகவை மன்றம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தது.
சொத்து முகவை மன்றத்தின் இணையத்தளத்தில் உள்ள பொதுப் பதிவேட்டின்படி, அந்த இரண்டு முகவர்களும் இஆர்ஏ ரியால்டி நெட்வொர்க் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.
ஈசூன் குடியிருப்பில் அதன் உரிமையாளர் குடியிருக்கவில்லை என்பதையும் அது குறைந்தபட்சக் குடியிருப்புக் காலமான ஐந்து ஆண்டுகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பதையும் திருவாட்டி ஆவ் அறிந்திருந்தும் அதை மறுவிற்பனை செய்ய முயன்றார் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில், 110ஏ டெப்போ ரோட்டில் உள்ள வீடு குறைந்தபட்சக் குடியிருப்புக் காலத்தை நிறைவுசெய்யாத போதிலும் அதனை வருங்காலத்தில் விற்பனை செய்வதற்காகத் திருவாட்டி லோ அதைப் பார்வையிட்டார் என அப்பதிவேடு கூறியது.
இது குறித்துக் கருத்து தெரிவிக்க அவர்கள் இருவரும் மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது.