அறுபதாண்டு மணவாழ்க்கை வெற்றியின் ரகசியம்

அறுபதாண்டு மணவாழ்க்கை வெற்றியின் ரகசியம்

3 mins read
9778719a-22e4-4c8c-944f-58a29ec1ee26
இந்து முறைப்படி திருமணம், மேற்கத்திய பாணி தேநீர் விருந்து, சீன பாணியில் இரவு விருந்து. - படங்கள்: த ஒலிம்பியன்
multi-img1 of 2
Google News Preferred Icon

சிங்கப்பூரின் திடல்தட வீரராகச் சாதித்த ஒருவரின் மணவாழ்க்கையின் தொடக்கம் ஒரு பந்தயத் திடல்தான்.

வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த இருவர் ஒருவராகி ஒன்றிணைந்த வாழ்க்கையைத் தொடங்கியது விளையாட்டு மூலமே.

திரு கனகசபை குணாளனும் திருவாட்டி சோங் யூன் யின்னும் 1964ஆம் ஆண்டு தோக்கியோ ஒலிம்பிக் பந்தயத் திடலில் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொண்டபோது இருவருக்கும் வயது 22.

தற்போது அவர்கள் தங்களது அறுபது ஆண்டுகால மணவாழ்க்கையை வெற்றிகரமாக முடித்து இன்னும் சிறப்புடன் வாழ்ந்து வருகிறார்கள். தற்போது அவர்கள் 83 வயதை எட்டிவிட்டார்கள்.

அவர்களின் காதல் வாழ்க்கையைப் படம்பிடித்து வந்தது ‘தப்லா!’ ஆங்கில வார இதழ்.

இளம் பருவத்தினராய்ச் சந்தித்து, காதலைப் பரிமாறிக்கொண்ட இருவரும் பிற்காலத்தில் விளையாட்டு வீரர்களாக வலம் வந்தனர்.

ஆனால், இருவரும் வெவ்வேறு இனம் என்பதால் அவர்களின் காதல் கல்யாணத்தின் தொடக்கம் இனிமையாக இல்லை.

திரு குணாளன் மற்றும் திருவாட்டி சோங் இருவரின் வீட்டிலும் அவர்களின் திருமணத்திற்குச் சம்மதம் கிடைக்கவில்லை.

இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு அவர்கள் இருவரும் நுழைவுச்சீட்டு வாங்கி இருந்தனர். தமது வீட்டிலிருந்து திரு குணாளன் அந்நிகழ்ச்சிக்குப் புறப்பட்டபோது, “நீ இப்போது ஒரு சீனப் பெண்ணுடன் செல்கிறாய். இன்று அவளுடன் சென்றால் மீண்டும் வீட்டுக்கு வந்துவிடாதே,” என்று அவரது பெற்றோர் கண்டிப்புடன் கூறினர்.

“அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். என் கண்கள் குளமாகின. உடல் சிலிர்த்தது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. உடனடியாக மாடியில் உள்ள எனது அறைக்குச் சென்றேன். எனது பிறப்புச் சான்றிதழை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டேன்,” என்று திரு குணாளன் நினைவுகூர்ந்தார்.

இசை நிகழ்ச்சிக்குச் செல்லும் திட்டத்தை இருவரும் ரத்து செய்தனர்.

அப்போது தியோங் பாரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்துகொண்டிருந்தார் திரு குணாளன். தம்முடன் பணியாற்றிய ஒருவருடன் சென்று, தங்குவதற்கு இடம் தேடினார். அன்று அவரது வீட்டில் தங்கினார்.

மறுநாள், தமது மாணவர் ஒருவரின் வீடு வாடகைக்கு இருப்பதை அறிந்து, குணாளனை அந்த நண்பர் அழைத்துச் சென்றார். அந்த வீட்டில் மாதம் 30 வெள்ளி வாடகையில் குணாளன் தங்கினார்.

சில மாதங்கள் காதல் தொடர்ந்தது. அதனை அறிந்த திருவாட்டி சோங்கின் தந்தையும் சித்தப்பாவும், “உறவை முறித்துக்கொள் அல்லது வீட்டைவிட்டு வெளியேறு,” என்று எச்சரித்தனர்.

வீட்டிலிருந்து வெளியேறிய திருவாட்டி சோங், தனியாக வாழ்ந்துகொண்டிருந்த தமது தாயாரின் வீட்டிற்குச் சென்றார். அவர் 12 வயதாக இருந்தபோது அவரது தந்தையைத் தாயார் பிரிந்துவிட்டார்.

திருவாட்டி சோங்கும் திரு குணாளனும் ஒருவரின் இருப்பிடத்துக்கு மற்றவர் சென்று சந்தித்துக் கொண்டனர். ஆனால், அது நீடிப்பதற்குப் பதில் திருமணம் செய்துகொள்ளலாம் என இருவரும் முடிவெடுத்து 1965 அக்டோபரில் இருவரின் திருமணமும் நிச்சயிக்கப்பட்டது.

அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு, திருமண நாள் நெருங்கிய வேளையில் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை திரு குணாளனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

“கதவு தட்டும் சத்தம் கேட்டது. திறந்து பார்த்தபோது அங்கே எனது தந்தை. மீண்டும் ஒருமுறை என் உடல் சிலிர்த்தது. அப்போது வந்தது ஆனந்தக் கண்ணீர்,” என்றார் அந்த ஓய்வுபெற்ற ஒலிம்பிக் வீரர்.

தமது மகனின் காதல் இறுக்கத்தைப் புரிந்துகொண்ட தந்தை, திருவாட்டி சோங் இந்து மதத்திற்கு மாறி, இந்துப் பெயரைச் சூட்டிக்கொண்டு, கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டால் அதனை ஆசிர்வதிப்பதாகக் கூறினார்.

“நான் இந்துவாக மாறுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நான் ஒரு சுதந்திரச் சிந்தனையாளர்,” என்று கூறிய திருவாட்டி சோங், இரு வாரங்களில் தமது பெயரை ராஜேஸ்வரி என்று மாற்றிக்கொண்டார்.

1966 ஏப்ரல் 17ஆம் தேதி மேற்கத்திய பாணியில் மணமுடிக்கத் திட்டமிட்டிருந்த அவ்விருவரும், திரு குணாளனின் தந்தை விருப்பப்படி அதே நாளில் சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்துகொண்டனர்.

காலையில் இந்து முறைப்படி சடங்குகள், பிற்பகலில் மேற்கத்திய பாணி தேநீர் விருந்து, மாலையில் மணமகளின் தாயார் விருப்பப்படி சீன பாணி இரவு விருந்து.

“ஒரே நாளில் மும்முறை மணக்கோலம் கண்டோம். எங்களது 60 ஆண்டு மணவாழ்க்கை மகிழ்ச்சியுடன் நீடிப்பதற்கு அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம்,” என நகைச்சுவையுடன் கூறினார் திரு குணாளன்.

ஆயினும், ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதே அந்த மகிழ்ச்சிக்கு உண்மையான காரணம் என தம்பதியர் இருவரும் கூறினர்.

“எதையும் மனத்திற்குள் போட்டு பூட்டி வைப்பதில்லை. ‘நான்தான் உயர்வு’ என்று இருவருமே எண்ணியது இல்லை. நாங்கள் இருவரும் சரிசமமானவர்கள்,” என்று மணவாழ்க்கை வெற்றியின் ரகசியத்தை அம்பலப்படுத்தினர் திரு குணாளனும் திருவாட்டி சோங்கும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்