சிங்கப்பூர்வாசிகள் இருவரிடம் ஹண்டா கிருமித்தொற்று இல்லை

சிங்கப்பூர்வாசிகள் இருவரிடம் ஹண்டா கிருமித்தொற்று இல்லை

1 mins read
cbefd590-8e6a-46ae-92ce-c09efd1294b3
ஹண்டா கிருமித்தொற்றுக்காகத் தனிமைப்படுத்தப்பட்டோரில் ஒருவர் 67 வயது சிங்கப்பூரர். மற்றவர் 65 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசி. - படம்: ஏஎஃப்பி

சிங்கப்பூரில் ஹண்டா கிருமித்தொற்றுக்காகத் தனிமைப்படுத்தப்பட்ட இருவர், வீடு திரும்பியுள்ளனர். அவர்களிடம் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (ஜூன் 6), அவர்கள் தனிமைப்படுத்தப்படும் நடைமுறையை நிறைவேற்றியதாகத் தொற்றுநோய் அமைப்பு தெரிவித்தது.

“இருவரும் நலமாக உள்ளனர். அவர்களிடம் தொற்று இல்லை என்பது உறுதியானது,” என்று அமைப்பு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) குறிப்பிட்டது.

தனிமைப்படுத்தப்பட்டோரில் ஒருவர் 67 வயது சிங்கப்பூரர். மற்றவர் 65 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசி. அவர்கள் 42 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரிடையே குறிப்பிட்ட அந்தக் காலகட்டத்திற்குள் அறிகுறிகள் தென்படுவது வழக்கம் என்று நிபுணர்கள் கூறினர்.

ஏப்ரல் 25ஆம் தேதி, ஹண்டா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் விமானத்தில் அந்த இருவரும் பயணம் செய்தனர்.

ஏப்ரல் 1ஆம் தேதி அர்ஜென்டினாவின் உ‌‌ஷுவாயா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட எம் விஹொண்டியஸ் சொகுசுக் கப்பலிலும் பயணம் செய்த அவர்கள், செயின்ட் ஹெலனா என்ற பிரிட்டி‌ஷ் தீவில் இறங்கினர்.

அதற்கு அடுத்த நாள் அவர்கள் செயின்ட் ஹெலனாவிலிருந்து தென் ஆப்பிரிக்காவின் ஜோஹெனஸ்பர்க்கிற்கு விமானம் மூலம் புறப்பட்டனர்.

சிங்கப்பூருக்கு அவர்கள் தனித்தனியே வந்தனர். ஒருவர் மே 2ஆம் தேதியும் மற்றவர் மே 6ஆம் தேதியும் வந்தனர்.

சிங்கப்பூர் வந்திறங்கிய அவர்கள் இருவரும் தேசியத் தொற்றுநோய் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மே 27 நிலவரப்படி, 13 பேரிடம் ஹண்டா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறியது. கிருமித்தொற்றால் மூவர் மாண்டனர்.

குறிப்புச் சொற்கள்
கிருமித்தொற்றுசிங்கப்பூர்தனிமை