லங்காவி தீவின் இரண்டாவது ஆக உயரிய மலைப்பகுதியான மாட் சின்சாங்கில் காணாமல்போன இரு சிங்கப்பூரர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் மலையேற்றம் தொடங்கி கிட்டத்தட்ட 15 மணிநேரத்திற்கு பின் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
திருவாளர்கள் வாங் செங் காங், 23, லி ஷுவென் கி, 25, இருவரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29ஆம் தேதி) ஏறத்தாழ நண்பகல் நேரம் தங்கள் மலையேறும் முயற்சியை தொடங்கினர்.
இந்நிலையில், அன்றிரவு 10.30 மணிக்கு சற்றுமுன் உதவி கேட்டு அழைப்பு வந்ததாக பாடாங் மட்சிராட் தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து காவல்துறை, குடிமைத் தற்காப்புத் படைப் பிரிவு, கெம்பாரா லங்காவி என்ற உள்ளூர் பயண முகவர் நிறுவனம் ஆகியோர் அடங்கிய குழு காணாமல்போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டது.
மறுநாள் அதிகாலை 3.00 மணிக்கு முன்னர் அவர்களை மீட்புக் குழுவினர் மீட்டு, காலை சுமார் 4.35 மணிக்கு மலையிலிருந்து கீழே அடிவாரத்திற்கு வழிநடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுபற்றிக் குறிப்பிட்ட கெம்பாரா லங்காவி நிறுவனத்தின் திரு சைஃபுல் அஸ்ரஃப் மீட்புக் குழுவில் கிட்டத்தட்ட 15 பேர் இருந்ததாகத் தெரிவித்தார்.
அந்த இரு சிங்கப்பூர் மலையேறிகளும் நடைபாதைக்கு அருகில், மலையின் கீழ்மட்டத்தில் இருந்து ஏறத்தாழ இரண்டு மணிநேர தொலைவில் இருந்ததாக உள்ளூர் நடைபயண ஆர்வலர் ஒருவர் விளக்கினார்.

