கிராப் வாகன ஓட்டுநர் யோங் ஹோக் லம் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமக்கு விடாமல் தொந்தரவு ஏற்படுத்தும் விதமாக இருக்கும் வயிற்று வலி வேளைக்கு சாப்பிடாததால் வந்தது என்று நினைத்திருந்தார்.
வலி தொடர்ந்து பசி எடுப்பதும் குறைந்து வந்ததால் அவருக்கு கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்பொழுதுதான் அவருக்கு மூன்றாம் நிலை கல்லீரல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
“இது எனக்கு அதிர்ச்சியளித்தது, ஏனெனில் நான் சாதாரணமாக மது அருந்துவதில்லை,” என்று திரு யோங் கூறினார்.
அந்த 73 வயது ஆடவருக்கு ஹெப்படைடிஸ் பி அல்லது சி எனப்படும் கல்லீரல் அழற்சி நோய் எதுவும் இல்லை என்பதால் அவர் வழக்கமான கல்லீரல் புற்றுநோய் குறித்த பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை.
ஆனால் திரு யோங்கின் கல்லீரலில் கொழுப்புச் சத்து பாதிப்பு அதிகம் இருந்து அதனால் அவரது கல்லீரல் சேதமடைந்திருந்தது. தற்போதைய நிலையில் திரு யோங் போன்ற கல்லீரல் புற்றுநோய் எற்படக்கூடிய சாத்தியம் அதிகம் உள்ள நோயாளிகளுக்கு புற்றுநோய் சோதனைத் திட்டம் ஏதும் இல்லை.
இது இனி மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. தேசிய புற்றுநோய் நிலையத்தைச் சேர்ந்த பேராசிரியர் பியர்ஸ் சாவ் என்பவருக்கு இது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட அவருக்கு $6 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளது. இவர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சாதாரணமாக புற்றுநோய் அபாய அறிகுறிகள் இல்லாத நோயாளிகளுக்கு புற்றுநோய் பரிசோதனை செய்வது குறித்த உத்திபூர்வ திட்டம் வகுப்பது தொடர்பாக ஆய்வு நடத்துவார்.
‘சிங்கப்பூர் டிரான்ஸ்லேஷனல் ரீசர்ச் இன்வெஸ்டிகேட்டர் அவார்ட்’ என்ற பெருமைமிக்க விருதுடன் வரும் இந்த நிதி பேராசிரியர் சாவ் அவர்களுக்கு சுகாதார அமைச்சின் தேசிய மருத்துவ ஆய்வு மன்றம் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.
இவரைப்போல், தேசிய புற்றுநோய் நிலையத்தில் கழுத்து, தலை புற்றுநோய் பிரிவுத் தலைமை மருத்துவரான, கோபால் ஐயருக்கும் $6 மில்லியன் ஆய்வு நிதி வழங்கப்பட்டுள்ளது. இவர் கழுத்து, தலை தொடர்பான புற்றுநோய் சிகிச்சைக்கான ஆய்வை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.