லிம் சூ காங்கில் 4 வாகனங்கள் தொடர்புடைய விபத்து

லிம் சூ காங்கில் 4 வாகனங்கள் தொடர்புடைய விபத்து

இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்
படம்: சிங்கப்பூர் ரோட்ஸ் ஆக்சிடெண்ட்.காம்/ஃபேஸ்புக்

28 Jun 2024 - 8:53 pm

1 mins read

லிம் சூ காங் ரோட்டில் ஜூன் 27ஆம் தேதி மாலை நான்கு வாகனங்கள் தொடர்பான விபத்து ஏற்பட்டதை அடுத்து இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

நியோ தியூ ரோட்டை நோக்கிச் செல்லும் லிம் சூ காங் ரோட்டில் ஒரு வேனும் மூன்று லாரிகளும் விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து ஜூன் 27ஆம் தேதி மாலை 6.10 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.

‘லாலாமூவ்’ வேன் ஒன்று ஆரஞ்சு நிற லாரியுடன் மோதுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.

இதன் தொடர்பில் ஃபேஸ்புக்கில் பதிவான மற்றொரு காணொளியில் அந்த வேன் ஆரஞ்சு நிற லாரிக்கும் வெளிர் நீல லாரிக்கும் இடையில் இருப்பதைக் காண முடிகிறது. வெளிர் நீல லாரிக்குப் பின்புறம் அடர் நீல லாரி ஒன்று முன்புறக் கண்ணாடி சிதறிய நிலையில் காணப்படுகிறது.

சாலையின் மூன்று தடங்களை அந்த வாகனங்கள் அடைத்துக்கொண்டிருப்பதைப் படங்கள் காட்டுகின்றன.

விபத்தை அடுத்து லாரியில் பயணம் செய்த 45 வயது ஆடவரும் வேனை ஓட்டிய 42 வயது ஆடவரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அப்போது அவர்கள் இருவரும் நினைவுடன் இருந்ததாகக் காவல்துறை ஜூன் 28ஆம் தேதி கூறியது.

வேன் ஓட்டுநர் விசாரணையில் உதவிவருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறிய லாலாமூவ் நிறுவனப் பேச்சாளர் தேவை ஏற்பட்டால் நிறுவனம் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்மருத்துவமனைவாகன விபத்து

தொடர்புடைய செய்திகள்