சாலையை மறித்து மிதிவண்டிகள்: இரு பதின்ம வயதினர் கைது

1 mins read
a6bd50ad-4c60-4b47-b5a8-dbec3763db42
இரவு நேரத்தில் சாலையை மறித்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மிதிவண்டிகள். - படம்: ஜெரல்டைன் லிம்/ஃபேஸ்புக்

குவீன்ஸ்டவுனில் முக்கியமான சாலை ஒன்றின் குறுக்கே மிதிவண்டிகளை நிறுத்தி குறும்புச் செயலில் ஈடுபட்ட இரு பதின்ம வயதினரைக் காவல்துறை கைது செய்தது.

அவர்களில் ஒருவரின் வயது 15, மற்றவரின் வயது 16.

மிதிவண்டி பகிர்வு நிறுவனத்தைச் சேர்ந்தவையாக அந்த மிதிவண்டிகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கான்வெல்த் அவென்யூ சாலையின் குறுக்கே, மூன்று தடங்களை மறித்து மூன்று மிதிவண்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன. ஜெரல்டின் லிம் என்னும் பெண்மணி அதனை பின்னிரவு 2 மணியளவில் படம் எடுத்து தமது ஃபேஸ்புக்கில் பதிவேற்றினார்.

அந்தப் படத்தின்மூலம், ஆபத்தான குறும்புத்தனம் வெளிச்சத்துக்கு வந்தது.

தனியார் வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் இரு மிதிவண்டிகளை அப்புறப்படுத்தி கடந்து சென்றுவிட்ட நிலையில், மூன்றாவது மிதிவண்டி குறுக்கே நிற்பது தெரியாமல் டாக்சி ஒன்று அதன் மீது மோதியதாகவும் தமது பதிவில் அந்தப் பெண் குறிப்பிட்டு இருந்தார்.

அந்தச் சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை (டிசம்பர் 23) இரு பதின்ம வயதினரை காவல்துறைக் கைது செய்தது. அந்த இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்