மத்திய கிழக்குப் போரினால் மூன்றில் இரண்டு உள்ளூர் வர்த்தகங்கள் பாதிப்பு

மத்திய கிழக்குப் போரினால் மூன்றில் இரண்டு உள்ளூர் வர்த்தகங்கள் பாதிப்பு

2 mins read
198c3b33-3fe1-4ba6-868f-af8a0303b6ef
50 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சிங்கப்பூர் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறும் வருவாயில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. அதே வேளையில், மூன்றில் ஒரு பங்கு பெரிய நிறுவனங்கள் மட்டுமே வீழ்ச்சியைக் கண்டுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மத்திய கிழக்குப் போர் எரிசக்தி மற்றும் தளவாடச் செலவுகளை உயர்த்தியுள்ள நிலையில், மூன்றில் இரண்டு உள்ளூர் வணிகங்கள் மிதமான அளவு முதல் கடுமையான அளவு வரை பாதிக்கப்பட்டுள்ளதாகச் சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

புதன்கிழமையன்று (ஏப்ரல் 22) வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் 254 நிறுவனங்களின் கருத்துகள் சேகரிக்கப்பட்டன, அவற்றில் பெரும்பான்மையானவை சிறிய, நடுத்தர நிறுவனங்கள்.

இந்நிறுவனங்கள் கடுமையான இடையூறுகளை எதிர்கொள்வதாகவும் பெரிய வணிகங்களைவிட இந்த நெருக்கடியைச் சமாளிப்பதில் குறைவான நம்பிக்கையைக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தன.

உதாரணத்துக்கு, உயர்ந்து வரும் ஊழியர் செலவுகளால் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது அவற்றின் பணப்புழக்கத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

50 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சிங்கப்பூர் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறும் வருவாயில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. அதே வேளையில், மூன்றில் ஒரு பங்கு பெரிய நிறுவனங்கள் மட்டுமே வீழ்ச்சியைக் கண்டுள்ளன.

உண்மையில், 21 விழுக்காடு பெரிய வர்த்தகங்கள் இந்தப் பிரிவிலிருந்து வருவாயில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இது மாறிவரும் சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றியமைத்துக்கொள்ள அவை சிறந்த நிலையில் இருப்பதைக் காட்டுகிறது.

78 விழுக்காடு பெரிய நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், 36 விழுக்காடு சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மட்டுமே தற்போதைய ஏற்ற இறக்கத்தை நிர்வகிப்பதில் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

“எங்கள் அண்மைய கருத்துக்கணிப்பு சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் இடையே வளர்ந்து வரும் நம்பிக்கை இடைவெளியைக் காட்டுகிறது.

“பெரிய நிறுவனங்களால் உயர்ந்து வரும் செலவுகளைச் சிறப்பாக நிர்வகிக்க முடியும் நிலையில், தொடரும் எரிசக்தி மற்றும் தளவாட ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் இந்த அழுத்தத்தை மிகக் கடுமையாக உணர்கின்றன,” என்று சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் தலைமை நிர்வாகி கோக் பிங் சூன் கூறினார்.

குறிப்பாக எரிசக்தி விலைகள், கப்பல் போக்குவரத்து மற்றும் சரக்குக் கட்டணங்கள், வாடிக்கையாளர் தேவை ஆகியவற்றில் இந்தப் போரின் தாக்கத்தை உணர்வதாக வர்த்தகங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்