செவிகளுக்கு விருந்தான இசை, வாய்க்கு ருசியான உணவு, சுற்றிலும் இதயத்தை மகிழ்விக்கும் உறவுகள்.
இவை மூன்றையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கிறது ‘சுவாரே’ இசை விருந்து.
சுவாரே என்பது பிரஞ்சு மொழியில் ‘மாலை விருந்து’ எனப் பொருள்படுகிறது.
மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஆர்வமும் புதுமையும் பிரதிபலிக்கவே இந்தப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
மாதம் ஒருமுறை நடந்தேறும் இந்த இசை விருந்துக்கு மாலினி, பரிமளா ஸ்வார்ட்சன்பர்க் ஆகிய இரு பெண்களின் படைப்பாற்றலும் கடின உழைப்பும் அடித்தளம்.
“பெரிய அளவிலான இசைநிகழ்ச்சிகளுக்குப் பதிலாக, சிறிய அளவில் மக்கள் ஒருவரையொருவர் சந்தித்து தொடர்புகளை ஏற்படுத்த வாய்ப்பளிக்க எண்ணினோம்”, என்றார் திருவாட்டி பரிமளா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சியில் சிறப்புக் கலைஞர் திரையிசை பாடல்களையோ அல்லது அவர்களது சொந்த பாடல்களையோ மூன்று அங்கங்களாக படைப்பார்.
மக்கள் ஒருவருடன் ஒருவர் பேசி உறவாடுவதற்கும் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதற்கும் நிகழ்ச்சியின்போது நேரம் தரப்படும்.
தொடர்புடைய செய்திகள்
கிளார்க் கீ செண்ட்ரலில் அமைந்துள்ள ப்ளூ ஜேஸில் மே 24ஆம் தேதியன்று நடந்தேறிய சுவாரேயின் பத்தாவது நிகழ்ச்சியில் பின்னணிப் பாடகரும் சுயேச்சை கலைஞருமான பிரகதி குருபிரசாத் பங்கேற்றார்.
அண்மையில் இசையமைப்புத்துறையில் கால்பதித்து ‘அடடா’ என்ற தமது முதல் பாடலை நிகழ்ச்சியில் படைத்தார் பிரகதி.
அப்பாடலில் முக்கிய இடம்பிடித்த சாய் (chai), நிகழ்ச்சிக்கு வந்திருந்தோருக்கு வழங்கப்பட்டது.
“இதிலிருந்து அவர்கள் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் எவ்வளவு துல்லியமாக திட்டமிடுகின்றனர் என்பது தெரிகிறது,” என்று பிரகதி கூறினார்.
இப்படி உணவு, இடம், கலைஞர்கள், பாடல்கள் என ஒவ்வொன்றும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு புதுமையான அனுபவத்துடன் ஒவ்வொரு சுவாரே நிகழ்ச்சியும் உருவம் பெறுகிறது.
இருந்தபோதும் இதனை நடத்தி முடிப்பது எளிதன்று என குமாரி மாலினியும் திருவாட்டி பரிமளாவும் கூறுகின்றனர்.
இசைத்துறையில் அறிமுகமோ அனுபவமோ இல்லாத இவ்விரண்டு பெண்கள் யார்? என்ற விமர்சனங்கள் தங்களைப் பற்றி எழுந்ததாக அவர்கள் கூறினர்.
ஆயினும், இத்தகைய வார்த்தைகளால் துவண்டுபோகாமல் அவர்கள் தொடர்ந்து முயன்றனர்.
“ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே பாணிகள் வேறுபடலாம். இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பெண்கள் நடத்தும் போது, இசைநிகழ்ச்சியில் உணர்வுகள் கலந்து அழகு பெறுகின்றன,” என்று குமாரி மாலினி தெரிவித்தார்,
உள்ளூர்க் கலைஞர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டும் தளமாகவும் அமைகிறது சுவாரே நிகழ்ச்சி.
“சிங்கப்பூரில் உள்ளூர்க் கலைஞர்களுக்கு அவர்களது திறமைகளை வெளிக்காட்ட வாய்ப்புகள் மிகக் குறைவு,” என்று திருவாட்டி பரிமளா கூறினார்.
தொடக்கத்தில் உள்ளூர்க் கலைஞர்களை மட்டுமே வைத்து நிகழ்ச்சியை நடத்துவது ஏற்பாட்டாளர்களுக்குச் சவாலாக இருந்தது.
உள்ளூர்த் தொலைக்காட்சியில் வரும் கலைஞர்களுக்குப் பணம் செலவழித்து நுழைவுச்சீட்டுகள் வாங்க சிலர் தயக்கம் காட்டினர்.
அதனால் உள்ளூர்க் கலைஞர்களுடன் வெளிநாட்டுக் கலைஞர்களை இணைத்து நிகழ்ச்சிகளை படைக்கலாம் என்ற யோசனை பிறந்தது.
“வெளிநாட்டுக் கலைஞர்கள் திறமையுடன் வந்தாலும் அது ஒரு போதும் உள்ளூர்க் கலைஞர்களின் தனித்தன்மையையோ திறமையையோ குறைத்துவிடாது,” என்றார் குமாரி மாலினி.
இதன் மூலம் சிங்கப்பூரின் கலைத்துறையை மெருகேற்ற வகை செய்கிறது சுவாரே இசை நிகழ்ச்சி.
சுவாரே நிகழ்ச்சியின் மற்றொரு தனித்துவமான அம்சம், புகைப்படக் கலைஞர் சசி குமாரின் கைவினை.
ஒருவர் இசையில் லயித்து இருப்பது அல்லது மற்றவர்களுடன் உரையாடி கொண்டிருப்பது போன்ற அழகான தனிப்பட்ட தருணங்கள் புகைப்படமாகப் பதிவு செய்யப்படுகின்றன.
இது நிகழ்ச்சியின் நெருக்கமான சூழலை வெளிப்படுத்துகிறது.
இந்தியா, கனடா, இங்கிலாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தமிழ் கலைஞர்களை வரவழைத்து கூட்டாக இன்னும் பல ‘சுவாரே’ நிகழ்ச்சிகளை படைக்க வேண்டும் என்பது ஏற்பாட்டாளர்களின் எண்ணம்.
“எதிர்காலத்தில் சுவாரே நிகழ்ச்சியை சிங்கப்பூரைத் தாண்டி கொண்டுசெல்லவேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம்,” என்றார் குமாரி மாலினி.

