உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் துணைக் காவல் அதிகாரி மீது காரை ஏற்றி, அவருக்குக் கடுமையான முதுகுத்தண்டு முறிவை ஏற்படுத்திய ஆடவருக்கு ஈராண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் சென்ற ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி நடந்தது. துணைக் காவல் அதிகாரிகள் இருவரின் உத்தரவை ஆடவர் பின்பற்றவில்லை. வாகனம், அதிகாரிகளில் ஒருவரை மோதித் தள்ளியது. சாலையில் விழுந்த அவருக்கு முதுகுத்தண்டில் முறிவு உண்டானது.
பின்னர் 28 வயது சூரியா கணேசன், வாகனத்தை நிறுத்தாமல் மலேசியாவை நோக்கிச் சென்றார். அங்கு அவர் சென்றபோது சுங்கத்துறை அதிகாரிகள் அவரைச் சிங்கப்பூருக்குத் திரும்புமாறு கூறினர்.
பின்னர் சிங்கப்பூருக்குள் நுழைந்தவுடன் அவரை அதிகாரிகள் கைதுசெய்தனர்.
காயமுற்ற அதிகாரி, உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் 46 நாள்கள் மருத்துவ விடுப்பில் இருந்ததாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
ஆபத்தான முறையில் காரை ஓட்டி துணைக் காவல் அதிகாரியைக் காயப்படுத்தியது, அவருக்கு உதவத் தவறியது, மற்றோர் அதிகாரியின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியத் தவறியது ஆகிய குற்றச்சாட்டுகளை ஜூலை மாதத்தில் சூர்யா ஒப்புக்கொண்டிருந்தார்.


